"மதாயின் ஸாலிஹ்" நகரம் பற்றி திருக்குர்ஆன் கூறும் வரலாறு.! " mathaayin saalih " nagaram pattri thirukkuraan koorum varalaaru

"மதாயின் ஸாலிஹ்"        நகரம் பற்றி திருக்குர்ஆன் கூறும் வரலாறு.!

" Mathaayin Saalih " Nagaram Pattri Thirukkuraan Koorum Varalaaru

ஏக இறைவனின் சாந்தியும்

சமாதானமும் உங்கள்  மீதும்

உங்கள்  குடும்பத்தார்  மீதும்

என்றென்றும்  நிலவட்டுமாக"


நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அதிசய ஒட்டகமும் "மதாயின் ஸாலிஹ்" நகரம் பற்றி திருக்குர்ஆன் கூறும் வரலாறு!


மதினாவிற்கும் தபூக்கிற்கும் இடையில் ஹிஜ்ர் என்ற ஊரில் 'மதாயின் ஸாலிஹ்' என்ற இடம் ஜோர்டானின் பெட்ராவை போல மிக அழகான வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்களையும் மலைகளைக் குடைந்த வீடுகளையும், சிற்ப கலைகள் நிறைந்த அமைப்புகளையும் காண முடிந்தாலும் அதனை சுற்றுலாத்தளம் போல் யாரும் சென்று பார்க்கச் செல்வதில்லை...


மதினாவிற்கும் தபூக்கிற்கும் இடையில் ஹிஜ்ர் என்ற ஊரில் 'மதாயின் ஸாலிஹ்' என்ற இடம் ஜோர்டானின் பெட்ராவை போல மிக அழகான வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்களையும் மலைகளைக் குடைந்த வீடுகளையும், சிற்ப கலைகள் நிறைந்த அமைப்புகளையும் காண முடிந்தாலும் அதனை சுற்றுலாத்தளம் போல் யாரும் சென்று பார்க்கச் செல்வதில்லை. காரணம் அது இறைவனின் வேதனை இறங்கிய இடம் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது...


'மதாயின் ஸாலிஹ்' என்றாலே நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வசித்த ஊர் என்ற பொருள் தருகிறது. தமூது கூட்டத்தினருக்காக அனுப்பப்பட்டவர் நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்...


பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்து வசித்து வந்த தமூது கூட்டத்தினர் ஆது சமூகத்தைப் போன்று சிலைகளை வணங்கிக் கொண்டு, ஆடம்பர வாழ்க்கையால் ஆணவத்துடனும், மிகுந்த செருக்குடனும் தங்கள் பெருமைகளைப் பறைச்சாற்றும் விதமாக மாளிகை கட்டி வாழ்ந்து வந்தார்கள்.


அவர்களை நெறிப்படுத்த அவர்களில் ஒருவரான, அவர்கள் மிகவும் மதித்த, அவர்கள் அறிவார்ந்த சான்றோன் என்று அழைத்த 'நபி ஸாலிஹ்' அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஓரிறைக்கொள்கையை எத்திவைக்க இறைத்தூதராக்கினான் இறைவன்...


நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தமூது கூட்டத்தினரிடம் ''அல்லாஹ்வை மட்டும் வணங்குமாறும், அவனைத் தவிர வழிபாட்டுக்குரியவன் எவருமில்லை என்றும், அவன்தான் வானத்தையும், பூமியையும் விசாலமாக்கி அதில் நம்மையும் படைத்து இந்தத் தற்காலிக இடத்தில் வசதியாகத் தங்க வைத்திருக்கிறான். எனவே அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள். பாவ மன்னிப்புக் கோருங்கள். அவன் அன்புடையவன், நமக்கு மிக அருகில் இருக்கின்றான். நம் பிரார்த்தனைகளைக் கேட்பவனாக, ஏற்பவனாக இருக்கின்றான்" என்றெல்லாம் சொல்லி வந்தார்.


அதுவரை நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களக மதித்து வந்த கூட்டம் ஓரிறைக் கொள்கை பற்றி அவர் பேச தொடங்கியதும் அவரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர்...


அவர்கள் முன்னோர்கள் வணங்கியதை அவர்கள் வணங்கவிடாமல் ஸாலிஹ் தடுக்கிறார் என்று நினைத்தார்களே தவிர அவர்கள் முன்னோர்கள் செய்துவந்த காரியம் சரியானதுதானா என்று அவர்கள் யோசிக்கவில்லை. நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், அவர் உண்மையான இறைத்தூதரென்றால் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவரக் கோரினார்கள்.


அவர்கள் அத்தாட்சியாகக் கேட்டது ஓர் கர்ப்பமான பெண் ஒட்டகத்தை. ஏனென்றால் அந்தப் பகுதியில் அப்படியான ஒட்டகத்தை அவர்கள் கண்டதில்லை. அதனால் நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் கொண்டுவர முடியாது என்று எண்ணி அதை வேண்டினார்கள்.


இறைவனும் அவர்களை நேர்வழிப்படுத்த ஒரு வாய்ப்பு தந்து அவர்கள் கேட்டதற்கிணங்க ஒரு பாறைக்கு நடுவில் பிளந்து கொண்டு எல்லா மக்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சினையுற்ற வெள்ளை ஒட்டகம் வெளியே வந்தது. வெளியே வந்ததும் அது குட்டி போட்டது. அவ்வொட்டகத்திற்கு எந்தத் தீங்கும் செய்யாமலிருக்கக் கட்டளையும் வந்தது...


அங்குள்ள நீர்நிலைகளில் ஒருநாள் அந்த ஒட்டகம் தண்ணீர் அருந்தினால் மறுநாள்தான் அதில் மக்கள் தண்ணீர் அருந்த வேண்டும். ஒட்டகம் தண்ணீர் குடிக்கும் அதே நாள் மக்கள் அதில் தண்ணீர் குடிக்கக் கூடாது என்றும் கட்டளை இருந்தது. நிறைய மக்கள் மனம் திருந்தி அத்தாட்சிக்கு மதிப்பளித்தும் வந்தார்கள். அந்த ஒட்டகம் ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் பாலை தாராளமாகத் தந்தது...


தமூது சமூகத்தில் இருந்த ஒன்பது வன்முறை கூட்டத்தினர் இதையெல்லாம் கண்டு அதிருப்தி அடைந்தார்கள். அவர்கள் பல கடவுள் கொள்கையைக் கைவிடவில்லை, பணம் பறித்தல், கொள்ளை அடித்தல், அக்கிரமம் புரிதல் என்று எந்த நற்குணங்களும் இல்லாமல் இருந்தார்கள்...


'எவ்வளவு காலம்தான் இந்த ஒட்டகத்தை நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொல்வதற்குக் கட்டுப்பட்டு நம் முன்னோர்கள் வணங்கிய சிலைகளை உதாசீனப்படுத்துவது?' என்று பேசிக் கொண்டார்கள்.


அந்த அதிசய ஒட்டகத்தை அழிக்க வேண்டுமென்று திட்டம் தீட்டி அவர்களில் பலசாலியான ஒருவன் அந்த ஒட்டகத்தின் கால் நரம்பை அறுத்து அதனைக் கொலை செய்துவிட்டான். இதை அறிந்த நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மொழிந்தார்கள்; "உங்களுடைய வீடுகளில் மூன்று நாட்கள் சுகமாக இருங்கள், பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடுமென்று..."


இதைக் கேட்ட அழுக்கு நிறைந்த மனமுடையவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள். இரவில் ஸாலிஹ் நபியையும் கொல்லத் துணிந்து தோற்றார்கள். ஸாலிஹ் நபியும் அவரோடு இருந்த நம்பிக்கையாளர்களும் இறைவனின் அருளால் நடக்கவிருந்த இழிவிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். அந்த மூன்று நாட்களிலும் கூட அவர்கள் பாவமன்னிப்பு கேட்டு இறைவனிடம் திரும்பவில்லை. அகந்தையுடன் திரிந்தார்கள்...


மூன்றாவது நாள் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் நிலைகுலைந்து போனார்கள். அவரவர் வீடுகளிலேயே அழிந்து போனார்கள். அதற்கு முன் அவர்கள் அந்த இடத்தில் தங்கி இல்லாதது போல் அந்த இடமே சூனியமானது...


இது குறித்து ஸஹிஹ் புகாரியில் காணப்படுவது, 'ஹிஜ்ர்' பகுதியில் தங்கியிருந்த போது நபிகளாரின் தோழர்கள் அங்கிருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்து அதை வைத்து மாவு பிசைந்தார்கள். அதைப் பார்த்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிட்டு அதை வைத்து பிசைந்த அந்த மாவையும் ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போடும்படி கட்டளையிட்டார்கள்.


நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இருந்த அதிசய ஒட்டகம் தண்ணீர் குடித்த நீர்நிலையிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் படியும் பணித்தார்கள். (தொகுதி 4, நூல் 60 ஹதீஸ் 3379)


தமூது சமூகத்தினர் அநியாயம் செய்து வந்த காரணத்தால் அழிந்து போனார்கள். அவர்களுக்கு நேர்வழியைக் காட்ட இறைத்தூதரை தந்தான். ஆனால் அவர்கள் குருட்டுத்தனத்தை விரும்பி இறைத்தூதர் ஸாலிஹையே பொய்ப்பித்தார்கள். அதனால் வேதனைக்குள்ளாக்கப்பட்டார்கள். இன்றும் அவர்களுடைய வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன. அது பயனற்று அப்படிக் கிடப்பதும் நமக்கான அத்தாட்சிதான்.


திருக்குர்ஆன் :

89:9, 11:61-68, 15:80-82, 27:45-53, 41:17


கருத்துரையிடுக

புதியது பழையவை