அத்தியாயம்-009



அத்தியாயம்-009



அத்தியாயம் : 9

அத்தவ்பா - மன்னிப்பு

மொத்த வசனங்கள் : 129

117, 118 ஆகிய இரு வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், ஹிஜ்ரத் செய்து
வந்தவர்களையும், அடைக்கலம் தந்து உதவியவர்களையும், குறிப்பாக தபூக் யுத்தத்தில்
பங்கெடுக்காத மூன்று நபித்தோழர்களையும் அல்லாஹ் மன்னித்ததாகக் கூறுகிறான். ஒட்டு
மொத்த சமுதாயத்திற்கே பாவமன்னிப்பு வழங்கியது பற்றி இந்த அத்தியாயம் பேசுவதால் இந்த
அத்தியாயத்திற்கு "அத்தவ்பா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த அத்தியாயத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு அத்தியாயத்தின்
துவக்கத்திலும் "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்''
என்ற பொருள்படும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்ற சொற்றொடர்
அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அந்தச் சொற்றொடர்
அமைக்கப்படவில்லை. இதற்குப் பலரும் பலவிதமான காரணங்களையும், தத்துவங்களையும்
கூறுகின்றனர். திருக்குர்ஆனைப் பிரதி எடுத்த இஸ்லாத்தின் மூன்றாவது ஜனாதிபதியான
உஸ்மான் (ரலி) அவர்கள் பின்வரும் காரணத்தைக் கூறுகின்றார்கள்.

திருக்குர்ஆனில் ஒன்பதாவது அத்தியாயமும், எட்டாவது அத்தியாமும் ஒரே அத்தியாயமாக
இருக்குமோ என்று நான் நினைக்கிறேன். இரண்டும் ஒரே மாதிரியான செய்திகளையே
சொல்லுகின்றன. எனவே தான் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்பதை நான் எழுதாமல்
விட்டிருக்கிறேன் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

மேலும் அவர்கள் இது பற்றிக் கூறும் பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு
அத்தியாயம் அருளப்பட்டவுடன் எழுத்தர்களை அழைத்து எழுதிக் கொள்ளச் சொல்வார்கள்.
ஒவ்வொரு வசனமும் எந்த அத்தியாயத்தில் இடம் பெற வேண்டும் என்பதையும் சொல்வார்கள்.
ஆனால் இந்த இரண்டு அத்தியாயங்களும் சேர்ந்து இரு அத்தியாயங்களா? அல்லது ஒரே
அத்தியாயமா? என்பதை அவர்கள் கூறாமல் சென்று விட்டதால் நான் "பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம்'' என்பதைச் சேர்க்கவில்லை. இது தான் அவர்கள் கூறிய காரணம்.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. காரணம் எதுவாக
இருந்தாலும், இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்''
எழுதப்படவில்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

1. (நம்பிக்கை கொண்டோரே! இது), நீங்கள் உடன்படிக்கை செய்த இணை கற்பித்தோரிடமிருந்து
அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக் கொள்ளும் பிரகடனம்.

2. (இணை கற்பிப்போரே!) நான்கு மாதங்களுக்கு இப்பூமியில் (மக்காவில்) சுற்றித்
திரியுங்கள்! அல்லாஹ்வை நீங்கள் வெல்ல முடியாது என்பதையும், (தன்னை) மறுப்போரை
அல்லாஹ் இழிவுபடுத்துபவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

3. இணை கற்பிப்போரிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக் கொண்டனர். இது,
இம்மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய பிரகடனம். நீங்கள்
திருந்திக் கொண்டால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் புறக்கணித்தால் நீங்கள்
அல்லாஹ்வை வெல்ல முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! துன்புறுத்தும் வேதனை பற்றி
(ஏக இறைவனை) மறுப்போரை எச்சரிப்பீராக!

4. இணை கற்பிப்போரில் நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்து, அவர்கள்
(அவ்வுடன்படிக்கையில்) உங்களுக்கு எந்தக் குறைவும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக
எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களிடம் அவர்களின்
உடன்படிக்கையை அதற்குரிய காலக்கெடு வரை முழுமைப்படுத்துங்கள்! அல்லாஹ் (தன்னை)
அஞ்சுவோரை நேசிக்கிறான்.

5. எனவே புனித மாதங்கள்55 கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில்
கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு
பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு,
தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்!
அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.53

6. இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின்
வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப்
பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே
இதற்குக் காரணம்.

7. அந்த இணை கற்பிப்போருக்கு அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் எவ்வாறு உடன்படிக்கை
இருக்க முடியும்? மஸ்ஜிதுல் ஹராமில் நீங்கள் உடன்படிக்கை செய்தவர்களைத் தவிர.
அவர்கள் உங்களிடம் நேர்மையாக நடக்கும் வரை அவர்களிடம் நீங்களும் நேர்மையாக நடங்கள்!
அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை நேசிக்கிறான்.

8. எப்படி? அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களிடம் உள்ள உறவையும்,
உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள். தமது வாய்களால் அவர்கள் உங்களைத்
திருப்திப்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளங்கள் மறுக்கின்றன. அவர்களில் அதிகமானோர்
குற்றம் புரிந்தவர்கள்.

9. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கின்றனர். அவனது பாதையை
விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பவை கெட்டவையாகும்.

10. நம்பிக்கை கொண்டோர் விஷயத்தில் உறவையோ, உடன்படிக்கையையோ அவர்கள் பொருட்படுத்த
மாட்டார்கள். அவர்களே வரம்பு மீறியவர்கள்.

11. அவர்கள் திருந்தி, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள்,
மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள். அறிகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகளைத்
தெளிவாக்குகிறோம்.

12. உடன்படிக்கை செய்த பின் தமது உடன்படிக்கைகளை அவர்கள் முறித்து விட்டு, உங்கள்
மார்க்கத்தையும் பழித்தால் (இறை) மறுப்பின் தலைவர்களுக்கு எந்த உடன்படிக்கையும்
இல்லை என்பதால் அவர்களுடன் போரிடுங்கள்! அவர்கள் (தமது போக்கிலிருந்து) விலகிக்
கொள்ளக் கூடும்.53

13. தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும்
திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள
நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள்
நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.53

14. அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான்.
அவர்களை இழிவுபடுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான். நம்பிக்கை
கொண்ட சமுதாயத்தின் உள்ளங்களுக்கு அவன் ஆறுதல் அளிப்பான்.53

15. அவர்களின் உள்ளங்களில் உள்ள கோபத்தையும் (அவன்) நீக்குவான். அல்லாஹ் நாடியோரை
மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

16. அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் விடுத்து (வேறு)
அந்தரங்க நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளாதவர் யார் என்பதையும், உங்களில் போரிடுவோர்
யார் என்பதையும் அல்லாஹ் அடையாளம் காட்டாத நிலையில் விடப்படுவீர்கள் என்று
நினைக்கிறீர்களா? நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

17. இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும்
நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து
விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

18. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து
அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க
வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

19. ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும்
இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா?
அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்
வழி காட்ட மாட்டான்.



20. நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும், உயிர்களாலும்
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர், அல்லாஹ்விடம் மகத்தான பதவிக்குரியவர்கள். அவர்களே
வெற்றி பெற்றோர்.

21. அவர்களின் இறைவன் தனது அருளையும், திருப்தியையும், சொர்க்கச் சோலைகளையும்
(வழங்குவதாக) அவர்களுக்கு நற்செய்தி கூறுகிறான். அதில் அவர்களுக்கு நிலையான இன்பம்
உண்டு.

22. அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு.

23. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட
(இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!89 உங்களில்
அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.

24. "உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள்
வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும்,
நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும்
அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக
விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை
காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று
கூறுவீராக!

25. பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில்
உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும்
அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர்
புறங்காட்டி ஓடினீர்கள்.

26. பின்னர் அல்லாஹ் தனது அமைதியைத் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும்
அருளினான். நீங்கள் பார்க்காத படைகளையும் அவன் இறக்கினான். (தன்னை) மறுத்தவர்களைத்
தண்டித்தான். இது மறுப்போருக்குரிய தண்டனை.

27. பின்னர், தான் நாடியோரை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற
அன்புடையோன்.

28. நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல்
ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது.200 நீங்கள் வறுமையைப் பயந்தால்
அல்லாஹ் நாடினால் தனது அருளால் பின்னர் உங்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான்.410
அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

29. வேதம் கொடுக்கப்பட்டோரில்27 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாமல்,
அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல்,186 உண்மையான
மார்க்கத்தைக் கடைப் பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு201 ஜிஸ்யா வரியைத் தம்
கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!53

30. "உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ்92 அல்லாஹ்வின்
மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும்
கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள்.
அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

31. அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன்
மஸீஹையும்92 கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளை
யிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை
கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.10

32. அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை)
மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.

33. இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக
நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.

34. நம்பிக்கை கொண்டோரே! மத குரு மார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின்
செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்)
தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும்
சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக!139

35. அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின்
நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். "இதுவே
உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!''
(என்று கூறப்படும்)

36. வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில்157
உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம்202 பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு
மாதங்கள் புனிதமானவை.55 இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு
நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன்
போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை)
அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!53

37. (மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை) மறுப்பை அதிகப்படுத் துவதே. இதன்
மூலம் (ஏக இறைவனை) மறுப்போர் வழி கெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை
நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ்
புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனித
மற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன.
(தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்டமாட்டான்.

38. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? "அல்லாஹ்வின் பாதையில்
புறப்படுங்கள்!'' என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து
விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு
முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.

39. நீங்கள் புறப்படாவிட்டால் உங்களை அவன் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான்.
உங்களையன்றி வேறு சமுதாயத்தைப் பகர மாக்குவான். அவனுக்கு நீங்கள் எந்தக்கேடும்
விளைவிக்க முடியாது. எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

40. நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏக இறைவனை) மறுப்போர்
இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த
போதும், "நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று அவர் தமது
தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது
இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை)
மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே
உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

41. (படைபலம்) குறைவாக இருந்த போதும், அதிகமாக இருந்த போதும் புறப்படுங்கள்! உங்கள்
செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்!203 நீங்கள்
அறிந்தால் இது உங்களுக்குச் சிறந்தது.53

42. (முஹம்மதே!) அருகில் கிடைக்கும் பொருளாகவும், நடுத்தரமான பயணமாகவும் இருந்தால்
அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் பயணம் அவர்களுக்குச் சிரமமாகவும்,
தூரமாகவும் இருந்தது. எங்களுக்கு இயலுமானால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்'' என்று
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றனர். தங்களையே அவர்கள் அழித்துக்
கொள்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்பதை அல்லாஹ் அறிவான்.

43. (முஹம்மதே!) அல்லாஹ் உம்மை மன்னித்தான். உண்மை கூறுவோர் யார் என்பது உமக்குத்
தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் முன் அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?

44. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோர் தமது செல்வங்களாலும், உயிர்களாலும்
போருக்குச் செல்லாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்க மாட்டார்கள். (தன்னை) அஞ்சுவோரை
அல்லாஹ் அறிந்தவன்.

45. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது தமது உள்ளங்களில் சந்தேகம் கொள்வோரே
உம்மிடம் அனுமதி கேட்பார்கள். அவர்கள் தமது சந்தேகத்தில் தடுமாறிக்
கொண்டிருக்கின்றனர்.

46. அவர்கள் புறப்பட நினைத்திருந்தால் அதற்கான தயாரிப்பைச் செய்திருப்பார்கள்.
மாறாக அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் விரும்பவில்லை. எனவே அவர்களைச் சோம்பல் கொள்ள
வைத்தான். "போருக்குச் செல்லாதோருடன் நீங்களும் அமருங்கள்!'' என்று கூறப்பட்டு
விட்டது.

47. அவர்கள் உங்களுடன் புறப்பட்டிருந்தால் சீரழிவைத் தவிர (எதையும்) உங்களுக்கு
அதிகமாக்கியிருக்க மாட்டார்கள். குழப்பம் விளைவிக்க எண்ணி, உங்களிடையே கோள்
மூட்டியிருப்பார்கள். உங்களில் அவர்களின் ஒற்றர்களும் உள்ளனர். அநீதி இழைத்தவர்களை
அல்லாஹ் அறிந்தவன்.

48. (முஹம்மதே!) முன்னரும் அவர்கள் குழப்பம் விளைவிக்க எண்ணினார்கள். பிரச்சனைகளை
உம்மிடம் திசை திருப்பினார்கள். முடிவில் உண்மை தெரிந்தது. அவர்கள் வெறுத்த போதும்
அல்லாஹ்வின் காரியம் மேலோங்கியது.

49. "எனக்கு அனுமதியளிப்பீராக! என்னைச் சோதனைக்கு உள்ளாக்காதீர்!'' என்று
கூறுவோரும் அவர்களில் உள்ளனர். கவனத்தில் கொள்க! அவர்கள் குழப்பத்தில் விழுந்து
விட்டனர். நரகம் (ஏக இறைவனை) மறுப்போரைச் சுற்றி வளைக்கக் கூடியது.

50. உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அவர்களுக்கு அது துன்பத்தைத் தருகிறது.
உமக்குச் சோதனை ஏற்பட்டால் "(நல்ல வேளை) முன்னரே கவனமாக இருந்து கொண்டோம்'' என்று
கூறி மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர்.

51. "அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன்
எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று
கூறுவீராக!

52. "(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரண்டு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும்
எங்களுக்கு எதிர் பார்க்கிறீர்களா? ஆனால் அல்லாஹ் தனது வேதனை மூலமோ, எங்கள் கைகளாலோ
உங்களுக்குத் தண்டனை வழங்குவதையே நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். நீங்கள்
எதிர்பாருங்கள்! உங்களுடன் நாங்களும் எதிர்பார்க்கிறோம்'' என்று (முஹம்மதே!)
கூறுவீராக!

53. "விரும்பியோ, விருப்பமின்றியோ செலவிடுங்கள்! உங்களிடமிருந்து அது ஏற்கப்படாது.
நீங்கள் குற்றம் புரியும் கூட்ட மாக இருக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக!

54. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும்,
விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து
ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.

55. அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அவற்றின்
மூலம் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை)
மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ்
நாடுகிறான்.

56. "நாங்களும் உங்களைச் சேர்ந்தவர்கள்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து
அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் உங்களைச் சேர்ந்தோர் அல்லர். மாறாக அவர்கள் பயந்த
சமுதாயத்தினர்.

57. ஒரு புகலிடத்தையோ, குகைகளையோ, அல்லது சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களானால்
விரைவாக அவற்றை நோக்கிச் சென்றிருப்பார்கள்.

58. தர்மங்களில் (அதைப் பங்கிடுவதில்) உம்மைக் குறை கூறுவோரும் அவர்களில் உள்ளனர்.
அதில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றனர். அதில் அவர்களுக்குக்
கொடுக்கப்படா விட்டால் உடனே ஆத்திரம் கொள்கின்றனர்.

59. அல்லாஹ்வும், அவனது தூதரும் அவர்களுக்கு வழங்கியதில் அவர்கள் திருப்தி கொண்டு
"அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அல்லாஹ்வும், அவனது தூதரும் எங்களுக்கு அவனது
அருளைத் தருவார்கள். நாங்கள் அல்லாஹ்விடமே ஆசை கொண்டோர்'' என்று அவர்கள்
கூறியிருந்தால் (அது நல்லதாக இருந்திருக்கும்).140

60. யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட
வேண்டியவர்களுக்கும்,204 அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும்,
அல்லாஹ்வின் பாதை யிலும்,205 நாடோடிகளுக்கும்206 தர்மங்கள் உரியனவாகும். இது
அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.130

61. இந்த நபிக்குத் தொல்லை தருவோரும் அவர்களில் உள்ளனர். "காதில் கேட்பதையெல்லாம்
இவர் நம்புபவர்' என்றும் கூறுகின்றனர். "உங்களுக்கு நன்மை தருபவற்றை அவர்
கேட்கிறார். அல்லாஹ்வை நம்புகிறார். நம்பிக்கை கொண்டோரின் கூற்றை நம்புகிறார்.
உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அருளாக இருக்கிறார்'' என்று கூறுவீராக!
அல்லாஹ்வின் தூதரைத் தொல்லைப்படுத்துவோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

62. உங்களைத் திருப்திப்படுத்துவதற் காக உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் சத்தியம்
செய்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வும், அவனது தூதருமே
திருப்திப்படுத்தத் தகுதி படைத்தவர்கள்.

63. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எதிராக நடப்போருக்கு நரக நெருப்பு உள்ளது.
அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மாபெரும் இழிவாகும் என்பதை அவர்கள் அறிய
வேண்டாமா?

64. தமது உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தும் அத்தியாயம், நம்பிக்கை கொண்டோர் மீது
அருளப்படுவதை நயவஞ்சகர்கள் அஞ்சுகின்றனர். "கேலி செய்யுங்கள்! நீங்கள் அஞ்சுவதை
அல்லாஹ் வெளிப்படுத்துபவன்'' என்று கூறுவீராக!

65. அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் "வேடிக்கையாகவும், விளையாட்டாகவும்
பேசினோம்'' என்று கூறுவார்கள். "அல்லாஹ் வையும், அவனது வசனங்களையும், அவனது
தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்பீராக!

66. சமாளிக்காதீர்கள்! நம்பிக்கை கொண்ட பின் (நம்மை) மறுத்து விட்டீர்கள். உங்களில்
ஒரு சாராரை நாம் மன்னித்தாலும், மற்றொரு சாராரை அவர்கள் குற்றம் புரிந்து
கொண்டிருந்ததால் தண்டிப்போம்.

67. நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள்
தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக்
கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான்.6 நயவஞ்சகர்களே குற்றம்
புரிபவர்கள்.

68. நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், (தன்னை) மறுப்போருக்கும் நரக
நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது
அவர்களுக்குப் போதுமானது. அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான்.6 அவர்களுக்கு நிலையான
வேதனை உண்டு.

69. உங்களுக்கு முன் சென்றோரைப் போல் (நீங்களும் இருக்கிறீர்கள்.) அவர்கள் உங்களை
விட வலிமை மிக்கோராகவும், அதிக மக்கட்செல்வமும் பொருட்செல்வமும் உடையோராகவும்
இருந்தனர். தங்களுக் குக் கிடைத்த பாக்கியத்தை அனுபவித்தனர். உங்களுக்கு முன்
சென்றோர் தமது பாக்கியத்தை அனுபவித்தது போல் உங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை
நீங்கள் அனுபவித்தீர்கள். (வீண் விவாதங்களில்) மூழ்கியோரைப் போல் நீங்களும் மூழ்கி
விட்டீர்கள். இவர்களது செயல்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் அழிந்து விட்டன. இவர்கள்
தாம் இழப்பை அடைந்தவர்கள்.

70. அவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம்,
இப்ராஹீமின் சமுதாயம், மத்யன் வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப்
புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம்
அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத்
தீங்கு இழைத்த வனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.

71. நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.
அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள்.
ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள்.
அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

72. நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ்
வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக
இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன.
அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.

73. நபியே! (ஏக இறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம்
கடினமாக நடப்பீராக!53 அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம்.

74. இறை மறுப்பிற்குரிய சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் மறுத்தனர். அடைய
முடியாத திட்டத்தையும் தீட்டினார்கள். அவர்களை அல்லாஹ்வும், தூதரும் அவனது அருள்
மூலம் செல்வந்தர்களாக ஆக்கியதற்காக தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் குறை
சொல்வதில்லை.140 அவர்கள் திருந்திக் கொண்டால் அது அவர்களுக்கு நன்மையாக அமையும்.
அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் அவர்களை இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத் தும்
வேதனைக்கு உட்படுத்துவான். பூமியில் அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை.

75. "அல்லாஹ் தனது அருளை எங்களுக்கு வழங்கினால் தர்மம் செய்வோம்; நல்லோர்களாக
ஆவோம்'' என்று அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்தோரும் அவர்களில் உள்ளனர்.

76. அல்லாஹ் தனது அருளை அவர்களுக்கு வழங்கிய போது அதில் கஞ்சத்தனம் செய்தனர்.
அலட்சியம் செய்து புறக்கணித்தனர்.

77. அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை மீறியதாலும், பொய்யுரைத்துக்
கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் சந்திக்கும் நாள்1 வரை அவர்களின் உள்ளங்களில் நய
வஞ்சகத்தை அவன் தொடரச் செய்தான்.

78. அவர்களின் இரகசியத்தையும், பரம இரகசியத்தையும் அல்லாஹ் அறிவான் என்பதை அவர்கள்
அறிய வேண்டாமா? அல்லாஹ் மறைவானவற்றையும் நன்கு அறிபவன்.

79. தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர
வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர்.
அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

80. (முஹம்மதே!) அவர்களுக்காக பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்!
அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ்
மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக்
காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

81. அல்லாஹ்வின் தூதர் (தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம்
இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது செல்வங்களாலும்,
உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். "கோடையில்
புறப்படாதீர்கள்!'' எனவும் அவர்கள் கூறுகின்றனர். "நரகத்தின் நெருப்பு இதை விட
வெப்பமானது'' என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

82. அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக265 அவர்கள் குறைவாகவே சிரிக்கட்டும்!
அதிகமாக அழட்டும்!

83. (முஹம்மதே!) உம்மை அவர்களில் ஒரு சாராரிடம் அல்லாஹ் திரும்ப வரச் செய்து
அப்போது, போருக்குப் புறப்பட அவர்கள் அனுமதி கேட்டால் "என்னுடன் ஒரு போதும்
புறப்படாதீர்கள்! என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் போர் புரியாதீர்கள்! நீங்கள்
போருக்குச் செல்லாது தங்கி விடுவதையே ஆரம்பத்தில் விரும்பினீர்கள். எனவே போருக்குச்
செல்லாது தங்கியோருடன் நீங்களும் தங்கி விடுங்கள்!'' என்று கூறுவீராக!

84. அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது
சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர்.
குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.

85. அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அதன் மூலம்
இவ்வுலகில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை) மறுத்துக்
கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான்.

86. "அல்லாஹ்வை நம்புங்கள்! அவனது தூதருடன் சேர்ந்து போரிடுங்கள்!'' என்று (கூறும்)
அத்தியாயம் அருளப்பட்டால் அவர்களில் வசதி படைத்தோர், "போருக்குச் செல்லாது
தங்கியோருடன் நாங்களும் தங்கிட எங்களை விட்டு விடுவீராக!'' எனக் கூறி உம்மிடம்
அனுமதி கேட்கின்றனர்.

87. வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்திக் கொண்டனர்.
அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள
மாட்டார்கள்.

88. மாறாக இத்தூதரும், (முஹம்மதும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் தமது
செல்வங்களாலும், உயிர்களாலும் போரிடுகின்றனர். அவர்களுக்கே நன்மைகள் உண்டு. அவர்களே
வெற்றி பெற்றோர்.

89. அவர்களுக்காகச் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் தயாரித்துள்ளான். அதன்
கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான
வெற்றி.

90. (போருக்குச் செல்லாது இருக்க) தங்களுக்கு அனுமதி வேண்டி கிராமவாசிகளில் காரணம்
கூறுவோர் உம்மிடம் வந்தனர். அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் பொய் கூறியோர்
போருக்குச் செல்லாது தங்கிக் கொண்டனர். அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போருக்கு
துன்புறுத்தும் வேதனை ஏற்படும்.

91. பலவீனர்கள் மீதும், நோயாளிகள் மீதும், (நல் வழியில்) செலவிடுவதற்கு எதுவும்
இல்லாதோர் மீதும் அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நலம் நாடினால் எந்தக்
குற்றமும் இல்லை. நன்மை செய்வோருக்கு எதிராக (தண்டிக்க) எந்த வழியும் இல்லை.
அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

92. (முஹம்மதே!) வாகனம் கேட்டு உம்மிடம் வந்தோரிடம் "உங்களை ஏற்றி
அனுப்புவதற்குரியது (வாகனம்) என்னிடம் இல்லை'' என்று நீர் கூறிய போது, (நல்
வழியில்) செலவிடுவதற்கு ஏதுமில்லை என்ற கவலையால் கண்கள் கண்ணீர் வடிக்கும் நிலையில்
திரும்பிச் சென்றோர் மீதும் குற்றம் இல்லை.

93. வசதி படைத்திருந்தும், உம்மிடம் அனுமதி கேட்டவர்கள் மீதே (தண்டிக்க) வழி உண்டு.
அவர்கள் வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதைப் பொருந்திக் கொண்டார்கள்.
அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். எனவே அவர்கள் அறிய
மாட்டார்கள்.

94. (போரை முடித்து) அவர்களிடம் நீங்கள் திரும்பும் போது அவர்கள் உங்களிடம்
சமாளிக்கின்றனர். "சமாளிக்காதீர்கள்! நாங்கள் உங்களை நம்பப் போவதில்லை. உங்களைப்
பற்றிய செய்திகளை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான்'' என்று (முஹம்மதே!)
கூறுவீராக! உங்கள் நடவடிக்கையை அல்லாஹ்வும், அவனது தூதரும் அறிவார்கள். பின்னர்
மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள்! நீங்கள்
செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

95. அவர்களிடம் நீங்கள் திரும்பும் போது அவர்களை நீங்கள் விட்டு விடுவதற்காக
உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்களை விட்டு விடுங்கள்!
அவர்கள் அசுத்தமாவர். அவர்களின் தங்குமிடம் நரகம். இது அவர்கள் செய்து
கொண்டிருந்ததற்கான தண்டனை.265

96. நீங்கள் அவர்கள் மீது திருப்தியடைய வேண்டுமென்பதற்காக உங்களிடம் சத்தியம்
செய்கின்றனர். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் குற்றம் புரியும்
கூட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான்.

97. கிராமவாசிகள் (ஏக இறைவனை) மறுப்பதிலும், நயவஞ்சகத்திலும் கடுமையானவர்கள்.
அல்லாஹ் தனது தூதர் மீது அருளியதன் வரம்புகளை அறியாமல் இருப்பதே அவர்களுக்கு மிக
ஏற்றதாகும். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

98. தாம் செலவிடுவதை இழப்பாகக் கருதுவோரும் அக்கிராமவாசிகளில் உள்ளனர்.
உங்களுக்குச் சோதனைகள் ஏற்படுவதை எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கே கெட்ட வேதனை
உள்ளது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

99. கிராமவாசிகளில் அல்லாஹ் வையும், இறுதி நாளையும்1 நம்புவோரும் உள்ளனர். தாம்
செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின் (முஹம்மதின்)
பிரார்த்தனைக்குரியதாகவும் கருதுகின்றனர். கவனத்தில் கொள்க! அது அவர்களுக்கு (இறை)
நெருக்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான்.
அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

100. ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல
விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான்.
அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன்
தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில்
அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

101. உங்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளிலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள்
உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தில் நிலைத்துள்ளனர். (முஹம்மதே!) அவர்களை நீர் அறிய
மாட்டீர்! நாமே அவர்களை அறிவோம். அவர்களை இரண்டு தடவை தண்டிப்போம். பின்னர் அவர்கள்
கடும் வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

102. மற்றும் சிலர் தமது பாவங்களை ஒப்புக் கொள்கின்றனர். நல்ல செயலை, மற்றொரு தீய
செயலுடன் கலந்து விட்டனர். அவர்களை அல்லாஹ் மன்னிக்கக் கூடும். அல்லாஹ்
மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

103. (முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம்
அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த் தனை
செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ்
செவியுறுபவன்; அறிந்தவன்.

104. தனது அடியார்களிடமிருந்து மன்னிப்பை அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான் என்பதையும்,
தர்மங்களைப் பெற்றுக் கொள்கிறான் என்பதையும், அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற
அன்புடையோன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?

105. "(செய்பவற்றைச்) செய்யுங்கள்! உங்கள் செயலை அல்லாஹ்வும், அவனது தூதரும்,
நம்பிக்கை கொண்டோரும் அறிவார்கள். மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம்
கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு
அறிவிப்பான்'' என்று கூறுவீராக!

106. மற்றும் சிலர் அல்லாஹ்வின் கட்டளைக்காகக் காக்க வைக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்
அவர்களைத் தண்டிக்கலாம். அல்லது மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

107. தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே
பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப்
போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் "நாங்கள்
நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள்
பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

108. அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின்
அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில்
தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர்.418 அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

109. அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது
கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும்
கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன்
சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

110. அவர்களின் உள்ளங்கள் வெடித்துச் சிதறினால் தவிர அவர்கள் கட்டிய கட்டடம்
அவர்களின் உள்ளங்களில் உள்ள சந்தேகத்தின் அடையாளமாக இருந்து கொண்டே இருக்கும்.
அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

111. நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும்
சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின்
பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்,
இஞ்சீல், மற்றும் குர்ஆனில் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி.
அல்லாஹ்வை விட தன் வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த
வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி.

112. (அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்;
நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்;
தீமையைத் தடுப்பவர்கள்; அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிக் கொள்பவர்கள். (இத்தகைய)
நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

113. இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய
உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும்,
இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

114. இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த
வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின்
அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.247

115. ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டிய பின் அவர்கள் தவிர்க்க
வேண்டியவற்றை அவர்களுக்குத் தெளிவுபடுத்தும் வரை, அவர்களை வழி கேட்டில்
விடுவதில்லை. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

116. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன்
உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வையன்றி உங்களுக்குப்
பொறுப்பாளனோ, உதவுபவனோ இல்லை.

117. இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ்
மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம்புரள முற்பட்ட பின்னரும்,
சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம்
நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

118. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி
விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது
உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு
போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக
அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.210

119. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!

120. அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து போருக்குச் செல்லாது தங்குவதும், அவரது உயிரை
விடத் தமது உயிர்களை விரும்புவதும் மதீனாவாசிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள
கிராமவாசிகளுக்கும் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு தாகம்,
சிரமம், பசி ஏற்பட்டாலும், (ஏக இறைவனை) மறுப்போருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும்
இடத்தை அவர்கள் மிதித்தாலும், எதிரியிடமிருந்து ஒரு தாக்குதலைப் பெற்றாலும் அதற்காக
அவர்களுக்கு ஒரு நல்லறம் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை. நன்மை செய்வோரின்
கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

121. அவர்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ எதை (நல் வழியில்) செலவிட்டாலும், ஒரு
பள்ளத்தாக்கைக் கடந்தாலும் அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்குப்
பரிசளிப்பதற்காக அவற்றை அல்லாஹ் பதிவு செய்யாமல் இருப்பதில்லை.

122. நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு
கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது
சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும்
புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக்
கொள்வார்கள்.211

123. நம்பிக்கை கொண்டோரே! உங்களை அடுத்திருக்கும் (இறை) மறுப்போருடன்
போரிடுங்கள்!53 உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும். (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ்
இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

124. ஓர் அத்தியாயம் அருளப்படும் போது "இது உங்களில் யாருக்கு நம்பிக்கையை
அதிகப்படுத்தியது?'' என்று கேட்போரும் அவர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோருக்கு
இது நம்பிக்கையை அதிகமாக்கியது. அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

125. ஆனால் உள்ளங்களில் நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் அசுத்தத்துடன் அசுத்தத்தை
இது அதிகமாக்கியது. அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தனர்.

126. ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவைகளோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள்
உணர மாட்டார்களா? பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை
பெறுவதுமில்லை.

127. ஓர் அத்தியாயம் அருளப்படும் போது, "உங்களை யாரேனும் பார்க்கின்றனரா?'' என்று
(கூறி) அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து பின்னர் திரும்பி விடுகின்றனர்.
அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதால் அவர்களின் உள்ளங்களை அல்லாஹ்
திருப்பி விட்டான்.

128. உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள்
சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர்.
நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.

129. அவர்கள் புறக்கணித்தால் "எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர
வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின்
இறைவன்'' எனக் கூறுவீராக!

கருத்துரையிடுக

புதியது பழையவை