அத்தியாயம்-017

அத்தியாயம்-017





அத்தியாயம் : 17

பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள்

மொத்த வசனங்கள் : 111

இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அளித்த வெற்றிகளும் அவர்கள் இறைவனுக்கு மாறு செய்ததும்
அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளும் இந்த அத்தியாயத்தில் 4 முதல் 8 வசனங்கள் வரை
கூறப்படுவதால் இஸ்ராயீலின் மக்கள் என்று இந்த அத்தியாயம் பெயர் பெற்றது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய
மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை
(முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன்.10 அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.263

2. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். "என்னைத் தவிர பொறுப்பாளர்களை ஆக்கிக்
கொள்ளாதீர்கள்!'' என்று இஸ்ராயீலின் மக்களுக்கு நேர் வழிகாட்டக் கூடியதாகவும் அதை
ஆக்கினோம்.

3. நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றியோரின் சந்ததிகளே! அவர் நன்றிமிக்க அடியாராக
இருந்தார்.

4. "பூமியில் இரண்டு தடவை குழப்பம் செய்வீர்கள்! பெருமளவுக்கு ஆணவம் கொள்வீர்கள்!''
என்று இஸ்ராயீலின் மக்களுக்கு அவ்வேதத்தில் அறிவித்தோம்.

5. அவ்விரண்டில் முதல் வாக்கு நிறைவேறும் போது கடுமையான, பலமுடைய நமது அடியார்களை
உங்களுக்கு எதிராக அனுப்பினோம். வீடுகளுக்குள்ளேயும் அவர்கள் ஊடுருவினார்கள். அது
செய்து முடிக்கப்பட்ட வாக்குறுதியாக இருந்தது.264

6. பின்னர் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு வாய்ப்பளித்தோம். செல்வங்களாலும், ஆண்
மக்களாலும் உங்களுக்கு உதவினோம். உங்களை அதிக எண்ணிக்கையுடையோராக ஆக்கினோம்.

7. நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால்
அதுவும் உங்களுக்கே. இரண்டாவது வாக்குறுதி நிறைவேறிய போது அவர்கள் உங்களுக்குக்
கேடு செய்தார்கள். (பைத்துல் முகத்தஸ் எனும்) பள்ளியில் முன்பு நுழைந்தது போல்
நுழைந்தார்கள். அவர்கள் ஆதிக்கத்தில் வந்தவற்றை அழித்தொழித்தார்கள்.

8. உங்கள் இறைவன், உங்களுக்கு அருள் புரிவான். நீங்கள் மீண்டும் (பழைய நிலைக்கு)
திரும்பினால் நாமும் திரும்புவோம். (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைச் சிறைச் சாலையாக
ஆக்கியுள்ளோம்.

9. இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழி காட்டுகிறது. "நம்பிக்கை கொண்டு நல்லறங்கள்
செய்வோருக்கு பெரிய கூலி உள்ளது'' என்று நற்செய்தியும் கூறுகிறது.

10. மறுமையை நம்பாமல் இருப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

11. நன்மைக்காகப் பிரார்த்திப்பது போலவே தீமைக்காகவும் மனிதன் பிரார்த்தனை
செய்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்.

12. இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத்
தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து
கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை
வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

13. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம்.
கியாமத் நாளில்1 அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக
அவன் காண்பான்.

14. "உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்'' (என்று
கூறப்படும்).

15. நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே
வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை
அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.265

16. ஓர் ஊரை நாம் அழிக்க நாடும் போது அவ்வூரில் சுகபோகத்தில் மூழ்கியோருக்கு
(கட்டுப்பட்டு நடக்குமாறு) கட்டளையிடுவோம். அவர்கள் அதில் குற்றம் புரிவார்கள்.
எனவே அவ்வூருக்கு எதிராக, (நமது) வார்த்தை உறுதியாகி விடுகிறது. உடனே அதை அடியோடு
அழிப்போம்.

17. நூஹுக்குப் பின் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். உமது இறைவன் தனது
அடியார்களின் பாவங்களை நன்கறியவும், பார்க்கவும் போதுமானவன்.

18. அவசர உலகத்தை விரும்புவோரில் நாம் நாடியோருக்கு, நாம் நாடியதை அவசரமாகக்
கொடுத்து விடுவோம். பின்னர் அவர்களுக்காக நரகத்தை ஏற்படுத்துவோம். இழிந்து,
அருளுக்கு அப்பாற்பட்டு அதில் கருகுவார்கள்.

19. நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின்
முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும்.6

20. இவர்களுக்கும், அவர்களுக்கும், அனைவருக்கும் (உமது இறைவனாகிய) நாம் நமது அருளை
அதிகமாகக் கொடுப்போம். உமது இறைவனின் அருள் மறுக்கப்பட்டதாக இல்லை.

21. "அவர்களில் ஒரு சிலரை மற்றும் சிலரை விட எவ்வாறு சிறப்பித்துள்ளோம்'' என்பதைக்
கவனிப்பீராக! மறுமை வாழ்வு மிகப் பெரிய தகுதிகளும், மிகப் பெரிய சிறப்புக்களும்
கொண்டது.

22. அல்லாஹ்வுடன் மற்றொரு கடவுளை நீர் கற்பனை செய்யாதீர்! அவ்வாறு செய்தால்
இழிந்தவராகவும், கை விடப்பட்டவராகவும் அமர்ந்து விடுவீர்!

23. "என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம்
செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும்
அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ'
எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும்
கூறுவீராக!

24. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!251 "சிறுவனாக
இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்
புரிவாயாக!'' என்று கேட்பீராக!

25. உங்கள் உள்ளங்களில் உள்ளதை உங்கள் இறைவன் நன்கறிபவன். நீங்கள் நல்லோராக
இருந்தால் திருந்துவோரை அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்.

26. உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும்206 அவரவரின் உரிமையை வழங்குவீராக!
ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்!

27. விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது
இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

28. (உம்மிடம் வசதியில்லாது) உமது இறைவனின் அருளைத் தேடி எதிர்பார்த்திருக்கும்
நிலையில் (ஏதும் கொடுக்காமல்) அவர்களைப் புறக்கணிப் பதாக இருந்தால் கடினமில்லாத
சொல்லையே அவர்களுக்குக் கூறுவீராக!

29. உமது கையைக் கழுத்தில் கட்டப்பட்டதாகவும் ஆக்காதீர்! ஒரேயடியாக அதை விரித்தும்
விடாதீர்! (அவ்வாறு விரித்தால்) இழிவடைந்தவராக வறுமைப்பட்டு அமர்ந்து விடுவீர்!

30. தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும்
வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும்
இருக்கிறான்.

31. வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும்,
உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

32. விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும்
இருக்கிறது.

33. அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்!
அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம்.401 அவர்
கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார்.43

34. அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்!
வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.

35. அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே
சிறந்தது. அழகிய முடிவு.

36. உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய
அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

37. பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின்
அளவை அடையவே மாட்டீர்!266

38. இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.

39. (முஹம்மதே!) இவை, உமது இறைவன் (தனது) ஞானத்திலிருந்து உமக்கு அறிவிப்பவை.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்யாதீர்! (அவ்வாறு செய்தால்) இழிந்தவராகவும்,
(இறையருளை விட்டும்) தூரமாக்கப்பட்டவராகவும் நரகத்தில் வீசப்படுவீர்!

40. உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி விட்டு, தனக்கு வானவர்களைப்
புதல்வியராக ஆக்கிக் கொண்டானா? பயங்கரமான கூற்றையே கூறுகிறீர்கள்!

41. அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்கûளைத்
தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.

42. "அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும்
அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்'' என்று கூறுவீராக!

43. அவர்கள் கூறுவதை விட்டும் அவன் தூயவன்.10 மிக மிக உயர்ந்தவன்.

44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் அவனைத் துதிக்கின்றன. அவனைப்
போற்றிப் புகழாத எதுவுமே இல்லை. ஆயினும் அவை துதிப்பதைப் புரிந்து கொள்ள
மாட்டீர்கள்! அவன் சகிப்புத் தன்மையுடையவன்; மன்னிப்பவன்.

45. நீர் குர்ஆனை ஓதும் போது உமக்கும் மறுமையை நம்பாதோருக்கும் இடையே மறைக்கப்பட்ட
ஒரு திரையை ஏற்படுத்துகிறோம்.

46. அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும்,
செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர்
கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

47. "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்று அநீதி இழைத்தோர்
இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச்
செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

48. "உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள்'' என்று கவனிப்பீராக! இதனால்
அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.

49. "நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும்
உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.

50, 51. "கல்லாகவோ, இரும்பா கவோ, அல்லது உங்கள் உள்ளங்களில் பெரிதாகத் தோன்றும் ஒரு
படைப்பாகவோ ஆகுங்கள்!'' (எப்படி ஆனாலும் உயிர்ப்பிப்பான்) என்று கூறுவீராக! "எங்களை
எவன் மீண்டும் படைப்பான்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். "முதல் தடவை உங்களை யார்
படைத்தானோ அவன் (மீண்டும் படைப்பான்)'' என்று கூறுவீராக! உம்மிடம் தங்கள் தலைகளைச்
சாய்த்து, "அது எப்போது வரும்?'' என்று கேட்கின்றனர். "அது சமீபத்தில் வரக்
கூடும்'' என்று கூறுவீராக!26

52. உங்களை அவன் அழைக்கும் நாளில்1 அவனைப் புகழ்ந்தவாறு பதிலளிப்பீர்கள்! குறைவான
காலமே (பூமியில்) வசித்ததாக நினைப்பீர்கள்.

53. அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே
பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.

54. உங்கள் இறைவன் உங்களைப் பற்றி நன்கு அறிந்தவன். அவன் நாடினால் உங்களுக்கு அருள்
புரிவான். நாடினால் தண்டிப்பான். (முஹம்மதே!) உம்மை அவர்களுக்குப் பொறுப்பாளராக
நாம் அனுப்பவில்லை.

55. வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களை உமது இறைவன் நன்கு அறிவான். நபிமார்களில்
சிலரை மற்றும் சிலரை விடச் சிறப்பித்திருக்கிறோம்.37 தாவூதுக்கு ஸபூரைக்
கொடுத்தோம்.

56. "அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை
விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது'' என்று கூறுவீராக!

57. இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும்
நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை
எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட
வேண்டியதாகும்.141

58. எந்த ஊராக இருந்தாலும் கியாமத் நாளுக்கு1 முன் அதை அழிக்காமலோ, கடுமையாகத்
தண்டிக்காமலோ நாம் இருக்க மாட்டோம். இது பதிவேட்டில்157 வரையப்பட்டதாக இருக்கிறது.

59. அற்புதங்களை முன்னோர்கள் பொய்யெனக் கருதியதே அதை நாம் (இப்போது)
அனுப்புவதற்குத் தடையாகவுள்ளது. ஸமூது சமுதாயத்தினருக்கு ஒட்டகத்தைக் கண் முன்னே
கொடுத்தோம். அதற்கு அவர்கள் அநீதி இழைத்தனர். அச்சுறுத்தவே அற்புதங்களை
அனுப்புகிறோம்.

60. (முஹம்மதே!) "உமது இறைவன் மனிதர்களை முழுமையாக அறிகிறான்'' என்று நாம் உமக்குக்
கூறியதை நினைப்பீராக! உமக்கு நாம் காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்ட
மரத்தையும் மனிதர்களுக்குச் சோதனையாகவே ஆக்கியுள்ளோம்.267 அவர்களை
அச்சுறுத்துகிறோம். அது அவர்களுக்குப் பெரிய வழிகேட்டையே அதிகமாக்கியது.

61. "ஆதமுக்குப் பணியுங்கள்!''11 என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத்
தவிர அனைவரும் பணிந்தனர். "களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?'' என்று அவன்
கேட்டான்.

62. "என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள்1 வரை எனக்கு
நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் கூறினான்.

63. "நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி.
(அது) நிறைவான கூலி'' என்று (இறைவன்) கூறினான்.

64. உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழி கெடுத்துக் கொள்! உனது
குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்!
பொருட்செல்வத்திலும், மக்கட்செல் வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்!
அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்
றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.

65. "எனது (நல்ல) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன்
கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.

66. உங்கள் இறைவனது அருளை நீங்கள் தேடுவதற்காக அவனே கப்பலை உங்களுக் காகக் கடலில்
செலுத்துகிறான். அவன் உங்களிடம் நிகரற்ற அன்புடையோனாவான்.

67. கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக் கிறீர்களோ
அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன்
புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.

68. நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களைப் புதையச் செய்வது பற்றியோ, உங்கள்
மீது கல் மழை பொழிவதைப் பற்றியோ அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் உங்களுக்கு
எந்தப் பொறுப்பாளரையும் காண மாட்டீர்கள்.

69. அல்லது மீண்டும் ஒரு தடவை அதில் (கடலில்) உங்களை அனுப்பும் போது, உங்களுக்கு
எதிராகப் புயல் காற்றை அனுப்பி நீங்கள் (அவனை) மறுத்ததால் உங்களை மூழ்கடிக்க
மாட்டான் என்று அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் நமக்கு எதிராக உங்களுக்கு அதில்
உதவுபவரைக் காண மாட்டீர்கள்.

70. ஆதமுடைய மக்களை மேன்மைப்படுத்தினோம். அவர்களைத் தரையிலும், கடலிலும் சுமந்து
செல்ல வைத்தோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். நாம் படைத்த அதிகமான
படைப்புகளை விட அவர்களைச் சிறப்பித்தோம்.

71. ஒவ்வொரு சமுதாயத்தையும் அவரவரின் தலைவருடன் நாம் அழைக்கும் நாளில்1 தமது
பதிவேடு வலது கையில் கொடுக்கப்படுவோர் தமது பதிவேட்டை வாசிப்பார்கள். அணுவளவும்
அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

72. இங்கே (கருத்துக்) குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழி
கெட்டவராகவும் இருப்பார்.390

73. (முஹம்மதே!) நம் மீது நீர் இட்டுக் கட்ட வேண்டும் என்பதற்காக, நாம் உமக்கு
அறிவித்ததை விட்டும் திசை திருப்ப முயன்றனர். (அப்படிச் செய்தால்) உம்மை உற்ற
நண்பராக ஆக்கியிருப்பார்கள்.

74. (முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச்
சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!

75. அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும் போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும் போது
இரு மடங்கும் வேதனையைச் சுவைக்கச் செய்திருப்போம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த
உதவியாளரையும் காண மாட்டீர்.156

76. (முஹம்மதே!) உம்மை இப்பூமியி லிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர்.
அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கி யிருப்பார்கள்.268

77. (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்கள் விஷயத்தில் (இதுவே நமது) வழி
முறையாகும். நமது வழி முறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர்!

78. சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு
(தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி
கூறப்படுவதாக இருக்கிறது.226

79. (முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன்
மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக்
கூடும்.

80. என் இறைவா! நல்ல முறையில் என்னை நுழையச் செய்வாயாக! நல்ல முறையில் என்னை
வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து எனக்காக உதவக்கூடிய ஆற்றலைத் தருவாயாக!'' எனக்
கூறுவீராக!

81. "உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது''
என்றும் கூறுவீராக!

82. நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில்
இறக்குகிறோம். அநீதி இழைத்தோருக்கு இழப்பையே அதிகப்படுத்தும்.

83. மனிதனுக்கு நாம் அருட்கொடையை வழங்கும் போது நம்மைப் புறக்கணித்து, தொலைவில்
செல்கிறான். அவனுக்குத் தீங்கு ஏற்படும் போது நம்பிக்கை இழந்தவனாகிறான்.

84. "ஒவ்வொருவரும் தத்தமது வழி யிலேயே செயல்படுகிறார். யார் நேர் வழியில் செல்பவர்
என்பதை உமது இறைவனே நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!

85. (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது
இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்''
என்று கூறுவீராக!

86, 87. (முஹம்மதே!) நாம் நாடினால் உமக்கு அறிவித்த தூதுச் செய்திகளைப் போக்கி
விடுவோம். பின்னர் அது பற்றி நம்மிடம் உமக்கு எந்தப் பொறுப்பாளரையும் நீர் காண
மாட்டீர். எனினும் உமது இறைவனின் அருளால் (போக்கப்படவில்லை). உம் மீது அவனது அருள்
பெரிதாகவே உள்ளது.26

88. "இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று
திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு
உதவியாள ராக இருந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!7

89. இக்குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லா முன் மாதிரியையும் வழங்கி யுள்ளோம்.
மனிதர்களில் அதிகமானோர் (இறை) மறுப்பைத் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை.

90. "இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே
மாட்டோம்'' என்று கூறுகின்றனர்.

91. அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும்.
அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.

92. அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய
வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

93. அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற
வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர
நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) "என் இறைவன் தூயவன்.10
நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக் கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

94. "மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?'' என்று அவர்கள் கூறுவது தான்,
மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

95. "பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு
வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்'' என்பதைக் கூறுவீராக!154

96. "எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் தனது
அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்'' என்றும் கூறுவீராக!

97. அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரே நேர் வழி பெற்றவர். அவன் யாரை வழி
கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காண
மாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத்
நாளில்1 எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை
அதிகமாக்குவோம்.

98. நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், "நாங்கள் எலும்பாகி மக்கிப் போகும் போது
புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கூறிய தாலும் இதுவே
அவர்களுக்குரிய தண்டனை.

99. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்ற (அற்பமான)வர்களைப் படைக்க
ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? சந்தேகமில்லாத ஒரு காலக் கெடுவையும்
அவர்களுக்காக அவன் ஏற்படுத்தியுள்ளான். அநீதி இழைத்தோர் (இறை) மறுப்பைத் தவிர வேறு
எதையும் ஏற்பதில்லை.

100. "என் இறைவனது அருளின் கருவூலங்களுக்கு நீங்கள் உரிமையாளர்களாக இருந்திருந்தால்
செலவிட அஞ்சி உங்களிடமே வைத்துக் கொண்டிருப்பீர்கள்! மனிதன் கஞ்சனாகவே
இருக்கிறான்'' என்று கூறுவீராக!

101. தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது
(நடந்ததை) இஸ்ராயீ லின் மக்களிடம் கேட்பீராக! "மூஸாவே! உம்மை சூனியம்
செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்'' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.

102. "வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியே இவற்றைச் சான்றுகளாக அருளியுள்ளான்
என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என்றே நான்
கருதுகிறேன்'' என்று அவர் கூறினார்.

103. அவர்களை அப்பூமியை விட்டு வெளியேற்ற அவன் நினைத்தான். அவனையும், அவனுடன்
இருந்த அனைவரையும் மூழ்கடித்தோம்.

104. "இப்பூமியில் வசியுங்கள்! மறுமை பற்றிய வாக்கு நிறைவேறும் போது உங்களை ஒரு சேர
கொண்டு வருவோம்'' என்று இதன் பின்னர் இஸ்ராயீலின் மக்களிடம் கூறினோம்.

105. உண்மையுடனேயே இதை அருளினோம். உண்மையுடனேயே இது இறங்கியது. உம்மை நற்செய்தி
கூறுப வராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.

106. மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப்
படிப்படியாக அருளினோம்.269

107. "இதை நம்புங்கள்! அல்லது இதை நம்பாமல் இருங்கள்!'' என்று கூறுவீராக!396 இதற்கு
முன் (வேத) அறிவு கொடுக்கப்பட்டோரிடம் இது கூறப்பட்டால் அவர்கள் முகம் குப்புற
ஸஜ்தாவில் விழுவார்கள்.

108. எங்கள் இறைவன் தூயவன்.10 எங்கள் இறைவனின் வாக்குறுதி நிறைவேற் றப்படுவதாக
உள்ளது எனக் கூறுகின்றனர்.

109. அழுது முகம் குப்புற அவர்கள் விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை
அதிகமாக்குகிறது.

110. "அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி
அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'' என்று கூறுவீராக! உமது
பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்!
இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!270

111. "சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில்
அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று
(முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

கருத்துரையிடுக

புதியது பழையவை