அத்தியாயம்-020
அத்தியாயம் : 20
தாஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26 வது எழுத்துக்கள்.
மொத்த வசனங்கள் : 135
தாஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26 வது எழுத்துக்கள்.
மொத்த வசனங்கள் : 135
தா, ஹா எனும் இரண்டு எழுத்துக்கள் முதல் வசனமாக இடம் பெறுவதால் இந்த
அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. தா, ஹா.2
2. (முஹம்மதே!) நீர் துர்பாக்கியசாலியாக ஆவதற்காக உமக்கு இக்குர்ஆனை நாம்
அருளவில்லை.
3. (நம்மை) அஞ்சுபவருக்கு அறிவுரையாகவே (அருளினோம்.)
4. உயர்வான வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.
5. அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.
6. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவ்விரண்டுக்கும் இடையே
உள்ளவையும், பூமிக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
7. சொல்லை நீர் உரத்துச் சொன்னால் (அதை மட்டுமின்றி) இரகசியத்தையும், அதை விட
இரகசியத்தையும் அவன் அறிகிறான்.
8. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனுக்கு அழகிய பெயர்கள்
உள்ளன.
9. மூஸாவைப் பற்றிய செய்தி உமக்குத் தெரியுமா?
10. அவர் ஒரு நெருப்பைக் கண்ட போது தமது குடும்பத்தினரிடம் "இருங்கள்! நான் ஒரு
நெருப்பைக் கண்டேன். அதில் உங்களுக்கு ஒரு தீப்பந்தத்தைக் கொண்டு வருவேன். அல்லது
நெருப்புக்கு ஏதேனும் ஒரு வழியைக் கண்டு வருவேன்'' என்றார்.
11. அங்கே அவர் வந்த போது "மூஸாவே' என்று அழைக்கப்பட்டார்.
12. "நான் தான் உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் "துவா'
எனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
13. நான் உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே அறிவிக்கப்படும் தூதுச் செய்தியைச்
செவிமடுப்பீராக!
14. நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே
என்னை வணங்குவீராக! என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக!
15. அந்த நேரம்1 வரக்கூடியதே. ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி
கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன்.
16. அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட
வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!
17. "மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' என்று இறைவன் கேட்டான்.
18. "இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு
இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன'' என்று அவர் கூறினார்.
19. "மூஸாவே! அதைப் போடுவீராக!'' என்று அவன் கூறினான்.
20. அதை அவர் போட்ட போது உடனே அது சீறும் பாம்பாக ஆனது.
21. "அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்'' என்று
அவன் கூறினான்.
22. உமது கையை உமது விலாப்புறத்துடன் சேர்ப்பீராக! தீங்கற்ற வெண்மையாக அது
வெளிப்படும். இது மற்றொரு சான்று.
23. நமது மகத்தான சான்றுகளில் சிலவற்றை உமக்குக் காட்டுகிறோம்.
24. நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான் (என்று இறைவன்
கூறினான்)
25. "என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!'' என்றார்.
26. எனது பணியை எனக்கு எளிதாக்கு!
27. எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு!
28. (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
29, 30. எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக
ஏற்படுத்து!26
31. அவர் மூலம் என்னைப் பலப்படுத்து!
32. எனது பணியில் அவரையும் கூட்டாக்கு!
33. நாங்கள் உன்னை அதிகமாகத் துதிப்பதற்காக.
34. உன்னை அதிகமாக நாங்கள் நினைப்பதற்காக.
35. நீ எங்களைப் பார்ப்பவனாக இருக்கிறாய் (என்றார்.)
36. "மூஸாவே! உமது கோரிக்கை ஏற்கப்பட்டது'' என்று அவன் கூறினான்.
37. இன்னொரு தடவை உமக்கு அருள் புரிந்துள்ளோம்.
38. அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக!
39. "இவரை (இக்குழந்தையை) பெட்டிக் குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல்
அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக்
கொள்வான்'' (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர்
வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன்.
40. உமது சகோதரி நடந்து சென்று, "இக்குழந்தையைப் பொறுப்பேற்பவரைப் பற்றி நான்
உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார். எனவே உமது தாயின் கண்
குளிர்வதற்காகவும், அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச்
சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர்.375 உம்மைக் கவலை யிலிருந்து
காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன் வாசிகளிடம் பல வருடங்கள்
வசித்தீர். மூஸாவே! பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர்.
41. எனக்காக உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன்.
42. நீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்! என்னை நினைப்பதில்
சோர்வடையாதீர்கள்!
43. இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான்.
44. "அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம்.
அல்லது அஞ்சலாம்'' (என்றும் கூறினான்.)
45. "எங்கள் இறைவா! அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது
வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம்'' என்று இருவரும் கூறினர்.
46. "அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன்49
இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.
47, 48. இருவரும் அவனிடம் சென்று ''நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே
இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு!181 அவர்களைத் துன்புறுத் தாதே! உனது
இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர் வழியைப் பின்பற்றியோர்
மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என
எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறுங்கள்!26
49. "மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?'' என்று அவன் கேட்டான்.
50. "ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே
எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார்.
51. "முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் கேட்டான்.
52. "அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) 157பதிவேட்டில் இருக்கிறது. என்
இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.
53. அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.284 உங்களுக் காக அதில் பாதைகளை
எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை
ஜோடிகளாக242 வெளிப்படுத்தினோம்.
54. உண்ணுங்கள்! உங்கள் கால்நடைகளை மேய விடுங்கள்! அறிவுடையோருக்கு இதில் பல
சான்றுகள் உள்ளன.
55. இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை
இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.
56. அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நமது சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். அவன்
பொய்யெனக் கருதி மறுத்து விட்டான்.
57. "மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை வெளியேற்ற எங்களிடம்
வந்துள்ளீரா?'' என்று அவன் கேட்டான்.
58. "இது போன்ற ஒரு சூனியத்தை நாமும் உம்மிடம் செய்து காட்டுவோம். எமக்கும்
உமக்குமிடையே (போட்டி நடத்திட) பொதுவான இடத்தில் ஒரு நேரத்தை நிர்ணயிப்பீராக! அதை
நாமும் நீரூம் மீறாதிருப்போம்'' (என்றும் கூறினான்.)
59. "பண்டிகை நாளே உங்களுக்குரிய நேரம். முற்பகலில் மக்கள் ஒன்று
திரட்டப்படட்டும்'' என்று அவர் கூறினார்.
60. ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று தனது சூழ்ச்சியை ஒருமுகப்படுத்தினான். பின்னர்
வந்தான்.
61. "உங்களுக்குக் கேடு தான் ஏற்படும். அல்லாஹ்வின் மீது பொய்யை
இட்டுக்கட்டாதீர்கள்! அவன் உங்களை வேதனையால் அழிப்பான். இட்டுக்கட்டியவன் இழப்பை
அடைந்து விட்டான்'' என்று அவர்களிடம் மூஸா கூறினார்.
62. அவர்கள் தமக்கிடையே விவாதம் செய்தனர். அதை இரகசியமாகச் செய்தனர்.
63. "இவ்விருவரும் சூனியக்காரர்கள். தமது சூனியத்தின் மூலம் உங்களை உங்க ளது
பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழி முறையை அழிக்கவும்
நினைக்கின்றனர்'' எனக் கூறினர்.
64. "உங்கள் சூழ்ச்சியை ஒருமுகப்படுத் துங்கள்! பின்னர் அணிவகுத்து வாருங்கள்!
போட்டியில் வெல்பவரே இன்று வெற்றி பெற்றவர்'' (என்றனர்)
65. "மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?'' என்று
(சூனியக்காரர்கள்) கேட்டனர்.
66. "இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும்,
கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.285
67. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.
68. "அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்'' என்று கூறினோம்.
69. "உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி
விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி.182 (போட்டிக்கு) வரும்
போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)
70. உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தா வில் விழுந்து, "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை
நம்பினோம்'' என்றனர்.
71. "நான் உங்களுக்கு அனுமதியளிப்ப தற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே
உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால்
மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலு வையில் அறைவேன்.
நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து
கொள்வீர்கள்'' என்று அவன் கூறினான்.
72. "எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள்
உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்!
இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்'' என்று அவர்கள் கூறினார்கள்.
73. "எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த
சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப் பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி
விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்'' (என்றும் கூறினர்.)
74. தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும்
மாட்டான். வாழவும் மாட்டான்.
75. நல்லறங்கள் புரிந்து நம்பிக்கை கொண்டவராக அவனிடம் வருவோர்க்கே உயர்வான பதவிகள்
உள்ளன.
76. நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி.
77. "எனது அடியார்களை அழைத்துச் செல்வீராக! கடலில் அவர்களுக்காக ஈரமில் லாத ஒரு
வழியை ஏற்படுத்திக் கொடுப்பீராக! பிடிக்கப்பட்டு விடுவதைப் பற்றிப் பயப்படாதீர்!
(வேறெதற்கும்) அஞ்சாதீர்!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம்.
78. ஃபிர்அவ்ன் தனது படையினருடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். கடலில் மூட வேண்டியது
அவர்களை மூடிக் கொண்டது.
79. ஃபிர்அவ்ன் தனது சமுதாயத்தை வழி கெடுத்தான். நேர் வழி காட்டவில்லை.
80. இஸ்ராயீலின் மக்களே! உங்கள் எதி ரியிடமிருந்து உங்களைக் காப்பாற்றினோம். தூர்
மலையின் வலப்பகுதியை உங்களுக்கு வாக்களித்தோம். உங்களுக்கு "மன்னு, ஸல்வா' (எனும்
உண)வை இறக்கினோம்.
81. நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் தூய்மையானதை உண்ணுங்கள்! இங்கே வரம்பு
மீறாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) எனது கோபம் உங்கள் மீது இறங்கும். எவன் மீது எனது
கோபம் இறங்கி விட்டதோ அவன் வீழ்ந்து விட்டான்.
82. திருந்தி, நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்து, பின்னர் நேர் வழி பெற்றவரை நான்
மன்னிப்பேன்.
83. "மூஸாவே! உமது சமுதாயத்தை விட்டு விட்டு அவசரமாக வந்தது ஏன்?'' (என்று இறைவன்
கேட்டான்.)
84. "அவர்கள் இதோ எனக்குப் பின்னால் வருகின்றனர். என் இறைவா! நீ
திருப்திப்படுவதற்காக உன்னிடம் விரைந்து வந்தேன்'' என்று அவர் கூறினார்.
85. "உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்து
விட்டான்'' என்று (இறைவன்) கூறினான்.
86. "உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார்.
"என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா?
அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா? அல்லது உங்கள்
இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த
வாக்கை மீறினீர்களா?'' என்று கேட்டார்.
87. "நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லை. மாறாக
அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே
ஸாமிரியும் வீசினான்.
88. அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தி னான். அது
சப்தமும் போட்டது. உடனே அவர்க(ளில் அறிவீனர்க)ள் "இதுவே உங்கள் இறைவன். மூஸாவின்
இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்'' என்றனர்.19
89. "அது எந்தச் சொல்லுக்கும் பதி லளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு
செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்பதையும் அவர்கள்
கவனிக்க வேண்டாமா?
90. "என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அரு ளாளன் தான்
உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக் குக்
கட்டுப்படுங்கள்!'' என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.
91. "மூஸா, எங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம்'' என்று அவர்கள்
கூறினர்.
92, 93. "ஹாரூனே! அவர்கள் வழி கெட்டதை நீர் பார்த்த போது என்னை நீர்
பின்பற்றாதிருக்க உமக்கு என்ன தடை?'' எனது கட்டளையை மீறி விட்டீரே!'' என்று (மூஸா)
கேட்டார்.26
94. "'என் தாயின் மகனே! எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர்! எனது
வார்த்தைக்காக காத்திராமல் இஸ்ராயீலின் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர்
என்று கூறுவீரோ என அஞ்சினேன்'' என்று (ஹாரூன்) கூறினார்.
95. "ஸாமிரியே! உனது விஷய மென்ன?'' என்று (மூஸா) கேட்டார்.
96. "அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளி னேன். அதை
எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது'' என்றான்.19
97. "நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் "தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும்.
மாற்றப்பட முடியாத வாக்களிக் கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது
கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று
(மூஸா) கூறினார்.19
98. உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை.
ஒவ்வொரு பொருளையும் விரிவாக அவன் அறிந்து வைத்திருக்கிறான்.
99. (முஹம்மதே!) இவ்வாறே முன் சென்ற செய்திகளை உமக்குக் கூறுகிறோம். நம்
அறிவுரையையும் உமக்கு வழங்கியுள்ளோம்.
100. இதைப் புறக்கணிப்போர் கியாமத் நாளில்1 பாவத்தைச் சுமப்பார்கள்.
101. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். கியாமத் நாளில்1 அவர்களுக்கு அது
மிகவும் கெட்ட சுமை.
102. ஸூர் ஊதப்படும் நாளில் குற்றவாளிகளை நீல நிறக் கண்களுடையோராக எழுப்புவோம்.
103. "நீங்கள் பத்து நாட்கள் தவிர (உலகில்) வசிக்கவில்லை'' என்று தமக்கிடையே
அவர்கள் இரகசியமாகப் பேசிக் கொள்வார்கள்.
104. "நீங்கள் ஒரு நாள் தவிர (உலகில்) வசிக்கவில்லை'' என்று அவர்களில்
அறிவுமிக்கவர்கள் கூறும் போது அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம்.
105. (முஹம்மதே!) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "என் இறைவன்
அவற்றைத் தூள் தூளாக்குவான்'' என்று கூறுவீராக!
106. பின்னர் அதை வெட்ட வெளிப் பொட்டலாக ஆக்குவான்.
107. அதில் மேடு பள்ளத்தைக் காண மாட்டீர்!
108. எவ்வித மறுப்புமின்றி அந்நாளில்1 அழைப்பாளரைப் பின் தொடர்வார்கள். அளவற்ற
அருளாளனிடம் ஓசைகள் யாவும் ஒடுங்கி விடும். காலடிச் சப்தம் தவிர வேறெதனையும் நீர்
செவியுற மாட்டீர்!
109. அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும்
பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது.17
110. அவர்களுக்கு முன்னே உள்ளதையும், அவர்களுக்குப் பின்னே உள்ளதையும் அவன்
அறிகிறான். அவனை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்.
111. என்றென்றும் உயிருடனிருப்பவன் முன்னே முகங்கள் கவிழ்ந்து விடும். அநியாயத்தைச்
சுமந்தவன் இழப்பை அடைந்து விட்டான்.
112. நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறங்களைச் செய்பவர், அநீதி இழைக்கப்படும் என்றோ
குறைவாக வழங்கப்படும் என்றோ அஞ்ச மாட்டார்.
113. இவ்வாறே அவர்கள் (இறைவனை) அஞ்சுவதற்காகவும், அல்லது அவர்களுக்குப் படிப்பினை
உண்டாக்கவும் குர்ஆனை அரபு மொழியில் அருளினோம்.227 இதில் தெளிவாக எச்சரித்துள்ளோம்.
114. உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்து விட்டான். (முஹம்மதே!) அவனது தூதுச்
செய்தி உமக்கு முழுமையாகக் கூறப்படுவதற்கு முன் குர்ஆன் விஷயத்தில் அவசரப்படாதீர்!
152 & 312 "என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து'' எனக் கூறுவீராக!269
115. இதற்கு முன் ஆதமிடம் உறுதி மொழி எடுத்தோம். அவர் மறந்து விட்டார். அவரிடம்
உறுதியை நாம் காணவில்லை.
116. "ஆதமுக்குப் பணியுங்கள்!''11 என்று வானவர்களிடம் நாம் கூறிய போது இப்லீஸைத்
தவிர அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.
117. ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். இவன் உங்களைச்
சொர்க்கத்திலிருந்து12 வெளியேற்றி விட வேண்டாம். அப்போது நீர்
துர்பாக்கியசாலியாவீர்!
118. இங்கே நீர் பசியோடு இருக்க மாட்டீர்! நிர்வாணமாக மாட்டீர்!
119. இங்கே நீர் தாகத்துடனும் இருக்க மாட்டீர்! உம்மீது வெயிலும் படாது! (என்று
கூறினோம்).
120. அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்)
மரத்தைப்13 பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா?
(என்றான்.)
121. அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது
வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது.174 அவ்விருவரும் சொர்க்கத்தின்12 இலையால் தங்களை
மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி
தவறினார்.
122. பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர் வழி
காட்டினான்.
123. இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும்
சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும். அப்போது
எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும்
மாட்டார்.
124. எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத்
நாளில் குருடனாக எழுப்புவோம்.
125. "என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக
எழுப்பினாய்?'' என்று அவன் கேட்பான்.
126. "'அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய். அவ்வாறே
இன்று மறக்கப்படுகிறாய்'' என்று (இறைவன்) கூறுவான்.
127. தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடப்பவனுக்கு இவ்வாறே கூலி
கொடுப்போம். மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.
128. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம் என்பது அவர்களுக்கு
நேர் வழியைக் காட்டவில்லையா? அவர்கள் குடியிருந்த இடங்களில் இவர்கள் நடக்கின்றனர்.
அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
129. உமது இறைவனிடமிருந்து குறிப்பிட்ட காலக்கெடுவும், விதியும்
முந்தியிருக்காவிட்டால் (அழிவு) நிச்சயமாகி இருக்கும்.
130. (முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு
முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப்
புகழ்வீராக! பகலின் ஓரங்களிலும் துதிப்பீராக! இதனால் (கிடைக்கும் கூலியில்) நீர்
திருப்தியடையலாம்.
131. (முஹம்மதே!) சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக
வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம்
சிறந்ததும், நிலையானதுமாகும்.
132. (முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும்
சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே
உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.
133. "இவர் தமது இறைவனிடமிருந்து சான்றை நம்மிடம் கொண்டு வர வேண்டாமா?'' என்று
அவர்கள் கேட்கின்றனர். முந்தைய வேதங்களில் உள்ள சான்று அவர்களை வந்தடையவில்லையா?
134. முன்னரே வேதனையின் மூலம் நாம் அவர்களை அழித்திருந்தால் "எங்கள் இறைவா!
எங்களிடம் ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? நாங்கள் இழிவையும், அவமானத்தையும்
அடையு முன் உனது வசனங்களைப் பின்பற்றி யிருப்போமே'' என்று கூறியிருப்பார்கள்.
135. "அனைவரும் எதிர்பார்க்கின்றனர். நீங்களும் எதிர்பாருங்கள்! நேரான வழிக்கு
உரியவர் யார்? நேர் வழி பெற்றவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்'' என்று
கூறுவீராக!