அத்தியாயம்-002
அத்தியாயம் : 2
அல் பகரா - அந்த மாடு
மொத்த வசனங்கள் : 286
அல் பகரா என்ற அரபுச் சொல்லின் பொருள் அந்த மாடு. திருக்குர்ஆனிலேயே மிகப் பெரிய
அத்தியாயம் இது தான். இந்த அத்தியாயத்தில் 67 வது வசனம் முதல் 71 வது வசனம் வரை
மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இடம்
பெற்றதன் காரணமாகவே "அந்த மாடு'' என்ற பெயர் வந்தது.
காளை, பசு இரண்டையும் இச் சொல் குறித்தாலும், பெயர் வரக் காரணமான 67-71 வசனங்களைக்
கவனித்தால் காளையையே குறிக்கிறது என அறியலாம்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. அலிஃப், லாம், மீம்.2
2. இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி
காட்டி.
3. அவர்கள் மறைவானவற்றை3 நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம்
அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.
4. (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4
அவர்கள் நம்புவார்கள். மறுமையையும்1 உறுதியாக நம்புவார்கள்.
5. அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே
வெற்றியாளர்கள்.
6. (ஏக இறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப்
பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
7. அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின்
பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.
8. "அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில்
உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.
9. அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர்.
(உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.
10. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை
அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும்
வேதனை உண்டு.
11. "பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது
"நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
12. கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.
13. "இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!'' என்று
அவர்களிடம் கூறப்படும் போது, "இம்மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்புவோமா?''
எனக் கேட்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே மூடர்கள். ஆயினும் அறிந்து கொள்ள
மாட்டார்கள்.
14. நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக்
கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன்5 தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச்
சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
15. அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற
விட்டு விடுகிறான்.
16. அவர்களே, நேர் வழியை விற்று வழி கேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின்
வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர் வழி பெற்றோரும் அல்லர்.
17. ஒருவன் நெருப்பை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை
வெளிச்சமாக்கிய போது அவர்களின் ஒளியைப் போக்கி, பார்க்க முடியாமல் இருள்களில்429
அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழி கேட்டை வாங்கிய)
இவர்களது தன்மையும் உள்ளது.
18. (இவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே இவர்கள் (நல் வழிக்கு) திரும்ப
மாட்டார்கள்.
19. அல்லது (இவர்களது தன்மை,) வானத்திலிருந்து விழும் மழை போன்றது. அதில்
இருள்களும்,429 இடியும், மின்னலும் உள்ளன. இடி முழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி
தமது விரல்களைக் காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். (தன்னை ஏற்க) மறுப்போரை அல்லாஹ்
முழுமையாக அறிபவன்.
20. அவர்களின் பார்வைகளை மின்னல் பறித்து விடப் பார்க்கிறது. (அது) அவர்களுக்கு
வெளிச்சத்தை ஏற்படுத்தும் போது அதில் நடக்கின்றனர். அவர்களை இருள் சூழ்ந்து
கொள்ளும் போது நின்று விடுகின்றனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களின் செவியையும்,
பார்வைகளையும் போக்கியிருப்பான். எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
21. மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே
வணங்குங்கள்! இதனால் (தண்டனை யிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.
22. அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்.288
வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக
(பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக
எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!
23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு,
(அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு
வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!7
24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு
அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை)
மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.
25. "நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன'' என்று
நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி
அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு
வழங்கப்பட்டது'' எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்)
கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும்8 உள்ளனர். அதில்
அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
26. கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்.
நம்பிக்கை கொண்டோர் "இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்பதை அறிந்து
கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் "இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை
நாடுகிறான்?'' என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம்9 அல்லாஹ் பலரை வழி
கேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர் வழியில் செலுத்துகிறான். இதன் மூலம்
குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழி கேட்டில் விடுவதில்லை.
27. அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பின் முறிக்கின்றனர்.
இணைக்கப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டதை (உறவை) முறிக்கின்றனர். பூமியில்
குழப்பம் விளைவிக்கின்றனர். அவர்களே இழப்பை அடைந்தவர்கள்.
28. அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு அவன்
உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை
உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்!
29. அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை
நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும்
அறிந்தவன்.
30. "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்''46 என்று உமது இறைவன்
வானவர்களிடம் கூறிய போது "அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில்
படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை
ஏற்றுக் கொண்டிருக்கிறோமே'' என்று கேட்டனர். "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்''
என்று (இறைவன்) கூறினான்.
31. அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர்
அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின்
பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான்.
32. "நீ தூயவன்.10 நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு
இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.
33. "ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' என்று (இறைவன்) கூறினான்.
அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, "வானங்களிலும், பூமியிலும் உள்ள
மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக்
கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' என (இறைவன்) கேட்டான்.
34. "ஆதமுக்குப் பணியுங்கள்!''11 என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத்
தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி
விட்டான்.
35. "ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில்12 குடியிருங்கள்! இருவரும்
விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை13 (மட்டும்)
நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்'' என்று நாம் கூறினோம்.
36. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த
(உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர்
மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை
வாழ்விடமும், வசதியும் உள்ளன'' 175 என்றும் நாம் கூறினோம்.
37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை14 தமது இறைவனிட மிருந்து ஆதம் பெற்றுக்
கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற
அன்புடையோன்.
38. "இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்!15 என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி
வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள்
கவலைப் படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம்.
39. "(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் தாம் நரகவாசிகள். அதில்
அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்'' (என்றும் கூறினோம்.)
40. இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்!
என் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்! உங்கள் உடன்படிக்கையை நான் நிறை வேற்றுவேன்.
என்னையே அஞ்சுங்கள்!
41. உங்களிடம் உள்ள(வேதத்)தை உண்மைப்படுத்தும் வகையில் நான் அருளிய (குர்ஆன் எனும்
வேதத்)தை நம்புங்கள்! இதை மறுப்போரில் முதன்மையாகாதீர்கள்! எனது வசனங்களை அற்ப
விலைக்கு விற்காதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!
42. அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!
43. தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு
செய்யுங்கள்!
44. வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை
ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
45. பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர
(மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.
46. தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம் என்றும், அவனிடம் திரும்பிச் செல்லவிருக்கிறோம்
என்றும் அவர்கள் நம்புவார்கள்.
47. இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும், உலக மக்கள்
அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!16
48. ஒருவர் இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை1 அஞ்சுங்கள்!
(அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது.17 எவரிடமிருந்தும்
எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
49. ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை எண்ணிப் பாருங்கள்!
அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்தார்கள். உங்கள் ஆண்
மக்களைக் கொலை செய்து விட்டு, பெண்(மக்)களை உயிருடன் விட்டனர். உங்கள்
இறைவனிடமிருந்து இது மிகப் பெரும் சோதனையாக இருந்தது.
50. உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக்
கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் ஆட்களை நாம் மூழ்கடித்ததை எண்ணிப் பாருங்கள்!
51. மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்!18
அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை
செய்தீர்கள்.19
52. நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம்.
53. நீங்கள் நேர் வழி பெறுவதற்காக வேதத்தையும், (பொய்யை விட்டு உண்மையைப்)
பிரித்துக் காட்டும் வழி முறையையும் மூஸாவுக்கு நாம் வழங்கியதை எண்ணிப் பாருங்கள்!
54. "என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே
தீங்கு இழைத்து விட்டீர்கள்.19 எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்!
உங்களையே கொன்று விடுங்கள்!20 இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது''
என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை
மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
55. "மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்'' என்று
நீங்கள் கூறிய போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடி
முழக்கம் தாக்கியது.21
56. பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் மரணித்த பின் உங்களை
உயிர்ப்பித்தோம்.
57. உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு
இறக்கினோம். "நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!'' (என்று
கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே
தீங்கிழைத்துக் கொண்டனர்.
58. "இவ்வூருக்குள் செல்லுங்கள்! அங்கே விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள்! வாசல்
வழியாக பணிவாக நுழையுங்கள்! 'மன்னிப்பு' என்று கூறுங்கள்! உங்கள் தவறுகளை
மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்'' என்று நாம் கூறியதை
எண்ணிப்பாருங்கள்!
59. ஆனால் அநீதி இழைத்தோர், தமக்குக் (கூறப்பட்டதை விடுத்து) கூறப்படாத வேறு
சொல்லாக மாற்றினார்கள். எனவே அநீதி இழைத்து, குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து
வேதனையை அவர்களுக்கு இறக்கினோம்.
60. மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது "உமது கைத்தடியால்
அந்தப் பாறையில் அடிப்பீராக!'' என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள்
பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த் துறையை அறிந்து கொண்டனர். "அல்லாஹ்
வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத்
திரியாதீர்கள்!'' (என்று கூறினோம்)
61. "மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக
உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்
காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான்''
என்று நீங்கள் கூறிய போது, "சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக்
கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு
உண்டு'' என்று அவர் கூறினார்.389 அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன.
அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள்
இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம்
செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.
62. நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில்
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி
அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும்
மாட்டார்கள்.
63. "உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில்
உள்ளதைச் சிந்தியுங்கள்! அப்போது நீங்கள் (நம்மை) அஞ்சுவீர்கள்'' என்று தூர் மலையை
உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப்
பாருங்கள்!22
64. இதன் பின்னரும் புறக்கணித் தீர்கள். அல்லாஹ்வின் அருளும், கருணையும் உங்களுக்கு
இல்லாதிருந்தால் இழப்பை அடைந்திருப்பீர்கள்!
65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! "இழிந்த குரங்குகளாக
ஆகுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம்.23
66. அதை அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும் பாடமாகவும், (நம்மை)
அஞ்சுவோருக்குப் படிப்பினையாகவும் ஆக்கினோம்.
67. "ஒரு காளை மாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக்
கட்டளையிடுகிறான்'' என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறிய போது "எங்களைக் கேலிப்
பொருளாகக் கருதுகிறீரா?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "அறிவீனனாக நான் ஆவதை
விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்'' என்றார்.24
68. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அது எத்தகையது' என்பதை அவன்
எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்'' என்று அவர்கள் கேட்டனர். "அது கிழடும், கன்றும்
அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக்
கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!'' என்று அவர் கூறினார்.
69. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அதன் நிறம் என்ன' என்பதை எங்களுக்கு
அவன் விளக்குவான்'' என்று அவர்கள் கேட்டனர். "அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற
கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்'' என்றார்.
70. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அது எத்தகையது' என்பதை அவன்
எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ்
நாடினால் நாங்கள் வழி காண்போம்'' என்று அவர்கள் கூறினர்.
71. "அது நிலத்தை உழவோ, விவசாயத் துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு;
குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது'' என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார். "இப்போது
தான் சரியாகச் சொன்னீர்'' என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த
சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர்.
72. நீங்கள் ஒருவரைக் கொன்று விட்டு அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும்
எண்ணிப் பாருங்கள்! நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன்.
73. "அதன் ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!'' என்று கூறினோம்.
இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது
சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்.24
74. இதன் பின்னர் உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக
இறுகி விட்டன. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள்
பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும்
பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
75. அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா?
அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின்
அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.
76. நம்பிக்கை கொண்டோரைக் காணும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக்
கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் மற்றவருடன் தனியாக இருக்கும் போது "அல்லாஹ்
உங்களுக்கு அருளியதை அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) கூறுவதால் உங்கள் இறைவனிடம்
உங்களுக்கு எதிராக அவர்கள் வாதிடுவார்களே? விளங்க மாட்டீர்களா?'' என்று
கேட்கின்றனர்.
77. அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிகிறான் என்பதை அறிய
மாட்டார்களா?
78. அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து
கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.
79. தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக "இது
அல்லாஹ்விடமிருந்து வந்தது' என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள்
எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்த தற்காகவும்
அவர்களுக்குக் கேடு உள்ளது.
80. குறிப்பிட்ட நாட்கள் தவிர நரகம் எங்களைத் தீண்டாது எனவும் அவர்கள் கூறினர்.
"அல்லாஹ்விடம் (இது பற்றி) ஏதாவது உடன்படிக்கை செய்துள்ளீர்களா? (அவ்வாறு
செய்திருந்தால்) அல்லாஹ் தனது உடன்படிக்கையை மீறவே மாட்டான். அல்லது நீங்கள்
அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று கேட்பீராக!
81. அவ்வாறில்லை! யாராக இருந்தாலும் தீமை செய்து, அவர்களின் குற்றம் அவர்களைச்
சுற்றி வளைத்துக் கொள்ளுமானால் அவர்கள் நரகவாசிகளே. அதில் அவர்கள் நிரந்தரமாக
இருப்பார்கள்.
82. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் தாம் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள்
நிரந்தரமாக இருப்பார்கள்.
83. "அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும்,
உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்;
மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும்
கொடுக்க வேண்டும்'' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர்
உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.
84. "உங்கள் இரத்தங்களை ஓட்டிக் கொள்ளாதீர்கள்! உங்கள் வீடுகளிலிருந்து உங்களை
(சேர்ந்தோரை) வெளியேற்றாதீர்கள்!'' என்று உங்களிடம் உறுதி மொழி எடுத்த போது,
நீங்களே சாட்சிகளாக இருந்து ஏற்றீர்கள்.
85. பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு
பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான
காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்)
கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்கிறீர்கள்.
(அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீட்டிலிருந்து) வெளியேற்றுவது தடை
செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா?
உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை.
கியாமத் நாளில்1 கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை
அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
86. அவர்கள் தாம், மறுமையை1 விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு
வேதனை இலேசாக்கப்படாது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
87. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச்
செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ்
மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த
போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.
88. "எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள் ளன'' என்று கூறுகின்றனர். அவ்வாறில்லை! (தன்னை)
மறுத்ததால் அல்லாஹ் அவர்களைச் சபித்தான்.6 அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை
கொள்கின்றனர்.
89. (ஏக இறைவனை) மறுப்போருக்கு எதிராக அவர்கள் இதற்கு முன் உதவி தேடி வந்தனர்.
அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்த
போது, (அதாவது) அவர்கள் அறிந்து வைத்திருந்தது25 அவர்களிடம் வந்த போது, அதை (ஏற்க)
மறுத்து விட்டனர். மறுப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது.6
90. அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது
மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை அல்லாஹ் அருளியதில்
பொறாமைப்பட்டதே இதற்குக் காரணம். எனவே கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள்.
(ஏக இறைவனை) மறுப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனை இருக்கிறது.
91. "அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்களுக்கு
அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை)
மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக்
கூடியதாகவும் இருக்கிறது. "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன்
அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!
92. மூஸா தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். அவருக்குப் பின் அநீதி இழைத்து
காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.19
93. உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! தூர் மலையை உங்களுக்கு
மேல் உயர்த்தினோம்.22 "உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடித்துக்
கொள்ளுங்கள்! செவிமடுங்கள்!'' (எனக் கூறினோம்). "செவியுற்றோம்; மாறு செய்தோம்''
என்று அவர்கள் கூறினர். (நம்மை) மறுத்ததால் அவர்களின் உள்ளங்களில் காளைக் கன்றின்
பக்தி ஊட்டப்பட்டது.19 "நீங்கள் (சரியான) நம்பிக்கை கொண்டிருந்தால் உங்கள்
நம்பிக்கை உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதே'' என்று கேட்பீராக!
94. "அல்லாஹ்விடம் உள்ள மறுமை1 வாழ்க்கை ஏனைய மக்களுக்கு இல்லாமல் உங்களுக்கு
மட்டும் சொந்தமானது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சாவதற்கு
ஆசைப்படுங்கள்!'' என்று கூறுவீராக!
95. அவர்கள் செய்த வினை காரணமாக ஒரு போதும் அதற்கு ஆசைப்பட மாட்டார்கள். அநீதி
இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.
96. மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக
ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக
அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப்படுவது
வேதனையிலிருந்து அவரைத் தடுக்கக் கூடியதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ்
பார்ப்பவன்.
97. யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே
அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்.152 & 312
"இது, தனக்கு முன் சென்றவற்றை4 உண்மைப்படுத்தக் கூடியதாகவும், நம்பிக்கை
கொண்டோருக்கு நேர் வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது'' என்று கூறுவீராக!
98. அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும்,
ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு
அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.
99. தெளிவான வசனங்களை (முஹம்மதே!) உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர
(யாரும்) அதை மறுக்க மாட்டார்கள்.
100. அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி
எறிந்ததில்லையா? மாறாக அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
101. அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் (முஹம்மத்) அல்லாஹ்விடமிருந்து
அவர்களிடம் வந்த போது, வேதம் கொடுக்கப்பட்டோரில்27 ஒரு பிரிவினர் ஏதும் அறியாதோரைப்
போல் அல்லாஹ்வின் வேதத்தைத் தமது முதுகுக்குப் பின்னால் வீசி எறிந்தனர்.
102. ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள்5 கூறியதை இவர்கள் பின்பற்றி னார்கள்.
(ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை.28
ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக்
கற்பித்த ஹாரூத், மாரூத்395 என்ற ஷைத்தான்களே5 மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக
இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவைனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல்
அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில்
பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர்.
அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது.
தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு
வாங்கியோருக்கு மறுமையில்1 எந்த நற்பேறும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து
வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய
வேண்டாமா?
103. அவர்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ்விட மிருந்து கிடைக்கும்
கூலி மிகவும் சிறந்தது. அவர்கள் அறிய வேண்டாமா?
104. நம்பிக்கை கொண்டோரே! "ராஇனா' எனக் கூறாதீர்கள்! "உன்ளுர்னா' என்று கூறுங்கள்!
செவிமடுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.29
105. (ஏக இறைவனை) மறுக்கும் வேதம் கொடுக்கப்பட்டோரும்27 இணை கற்பித்தோரும் உங்கள்
இறைவனிட மிருந்து ஏதேனும் நன்மை உங்களுக்கு அருளப்படுவதை விரும்ப மாட்டார்கள்.
நாடியோருக்கு மட்டும் தனது அருளை அல்லாஹ் வழங்குவான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
106. ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால்30 அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச்
சிறந்ததையோ, அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ்
ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
107. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும்,
அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர்
அறியவில்லையா?
108. இதற்கு முன் மூஸாவிடம் (கேள்வி) கேட்கப்பட்டது31 போல் உங்கள் தூதரிடம் கேட்க
விரும்புகிறீர்களா? நம்பிக்கையை (இறை) மறுப்பாக மாற்றுபவர் நேர் வழியை விட்டு விலகி
விட்டார்.
109. நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை) மறுப்போராக மாற்றிட வேதம்
கொடுக்கப்பட்டோரில்27 பெரும் பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான
பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப்
பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்!
அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
110. தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி
அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை
அல்லாஹ் பார்ப்பவன்.
111. "யூதராகவோ, கிறித்தவராகவோ இருப்பவரைத் தவிர (வேறு யாரும்) சொர்க்கத்தில் நுழைய
மாட்டார்கள்'' என்று கூறுகின்றனர். இது அவர்களின் வீண் கற்பனை. "நீங்கள்
உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!
112. அவ்வாறில்லை! தமது முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறமும்
செய்பவருக்கு அவரது கூலி அவரது இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை;
அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
113. "கிறித்தவர்கள் எதிலும் இல்லை' என்று யூதர்களும், "யூதர்கள் எதிலும் இல்லை'
என்று கிறித்தவர்களும் வேதத்தைப் படித்துக் கொண்டே கூறுகின்றனர். அறியாத மக்களும்
அவர்களைப் போலவே கூறுகின்றனர். அவர்கள் முரண்பட்டதில் அவர்களுக் கிடையே கியாமத்
நாளில்1 அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.
114. அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப்
பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்?32 பயந்து கொண்டே தவிர அவற்றில்
நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில்1
கடுமையான வேதனையுமுண்டு.
115. கிழக்கும், மேற்கும் அல்லாஹ் வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே
அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
116. "அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன்
தூயவன்.10 வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே
அடிபணிகின்றன.
117. (அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை
அவன் முடிவு செய்யும் போது அது குறித்து "ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி
விடும்.
118. "அல்லாஹ் எங்களிடம் பேசக் கூடாதா? அல்லது எங்களுக்கு ஓர் சான்று வரக்
கூடாதா?'' என்று அறியாதோர் கூறுகின்றனர். இவர்களுக்கு முன் சென்றோர் இவர்களின்
கூற்றைப் போலவே கூறினர். அவர்களின் உள்ளங்கள் ஒத்தவையாக இருக்கின்றன. உறுதியான
நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.
119. நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் (முஹம்மதே!)
உம்மை நாம் அனுப்பியுள்ளோம். நரகவாசிகளைப் பற்றி உம்மிடம் கேட்கப்படாது.
120. யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை
உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். "அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்'' எனக்
கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால்,
அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.
121. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் படிக்க வேண்டிய விதத்தில் அதைப்
படிக்கின்றனர். அவர்களே அதில் நம்பிக்கை கொண்டவர்கள். அதை ஏற்க மறுப்போரே இழப்பை
அடைந்தவர்கள்.
122. இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும், உலகத்தாரை விட
உங்களைச் சிறப்பித் திருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!16
123. ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை1 அஞ்சுங்கள்!
(அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெறப்படாது. எவருக்கும் எந்தப்
பரிந்துரையும் பயன்படாது.17 அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
124. இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர்
முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று
அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர்
கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது''
என்று அவன் கூறினான்.245
125. அந்த ஆலயத்தை33 மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம்
அமைத்ததை நினைவூட்டுவீராக!34 மகாமே இப்ராஹீமில்35 தொழுமிடத்தை ஏற்படுத்திக்
கொள்ளுங்கள்! "தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு,
ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று
இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.
126. "இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக34 ஆக்குவாயாக! இவ்வூராரில்
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' என்று
இப்ராஹீம் கூறிய போது, "(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்;
பின்னர் அவர்களை நரக வேத னையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது''
என்று அவன் கூறினான்.
127. அந்த ஆலயத்தின்33 அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது
"எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்;
அறிந்தவன்'' (என்றனர்.)
128. "எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை
உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு
முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை
ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' (என்றனர்.)
129. "எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர்,
உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67
கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்;
ஞானமிக்கவன்'' (என்றனர்.)36
130. தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப்
புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில்1
நல்லோரில் இருப்பார்.
131. அவரது இறைவன் "கட்டுப்படு!' என்று அவரிடம் கூறிய போது "அகிலத்தின்
இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்'' என்று அவர் கூறினார்.
132. "என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான்.
முஸ்லிம்களாகவே295 தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும்
தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.
133. யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? "எனக்குப்
பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்ட போது "உங்கள்
இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய
ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்)
கூறினர்.
134. அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள்
செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட
மாட்டீர்கள்.265
135. "யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்'' என்று
கூறுகின்றனர். "அவ்வாறல்ல! உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே
(பின்பற்றுவோம்). அவர் இணை கற்பித்தவராக இருந்ததில்லை'' எனக் கூறுவீராக!
136. "அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக்,
யஃகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும்,
ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து
வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்;37 அவனுக்கே
நாங்கள் கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்!
137. நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நேர் வழி
பெறுவர். புறக்கணிப்பார்களாயின் அவர்கள் எதிரிகளே. அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்
உமக்குப் போதுமானவன்; அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
138. "(நாங்கள்) அல்லாஹ் தீட்டும்வர்ணத்தை38 (ஏற்பவர்கள்.) அல்லாஹ்வை விட அழகிய
வர்ணம் தீட்டுபவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்'' (என்று கூறுங்கள்!)
139. "அல்லாஹ்வைப் பற்றி எங்களிடம் விதண்டா வாதம் செய்கிறீர்களா? அவனே எங்கள்
இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள்
உங்களுக்கு. நாங்கள் அவனுக்கே உளத்தூய்மையுடன் நடப்பவர்கள்'' என்று கூறுவீராக!
140. "இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித் தோன்றல்கள்
யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? நன்கு அறிந்தோர்
நீங்களா? அல்லாஹ்வா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த
சான்றை மறைப்பவனை விட அநீதி இழைத்தவன் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக
இல்லை.
141. அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது
உங்களுக்கு. அவர்கள் செய்ததைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.265
142. "ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் (முஸ்லிம்கள்) ஏன் திரும்பி
விட்டனர்?'' என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். "கிழக்கும், மேற்கும்
அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்'' என்று
கூறுவீராக!
143. இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர்
(முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான
சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப்
பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை
நிர்ணயித்திருந்தோம்.39 அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர
(மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப்
பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
144. (முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக்
காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே
உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்பு வீராக! நீங்கள் எங்கே
இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்!430 "இதுவே
தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்று வேதம் கொடுக்கப்பட்டோர்27 அறிவார்கள்.
அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
145. வேதம் கொடுக்கப்பட்டோரிடம்27 அத்தனை சான்றுகளையும் (முஹம்மதே!) நீர் கொண்டு
வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின்
கிப்லாவைப் பின்பற்றுப வராக இல்லை. அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப்
பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சையை நீர்
பின்பற்றினால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
146. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள்,27 தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை
அறிவார்கள்.25 அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
147. இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும். எனவே சந்தேகம் கொள்பவராக ஆகி
விடாதீர்!
148. ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே
நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும்
அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
149. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில்
திருப்புவீராக!430 அதுவே உம் இறைவனிடமிருந்து கிடைத்த உண்மை. நீங்கள் செய்வதை
அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
150. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில்
திருப்புவீராக!430 எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே
திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களிடம்
உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை
உங்களுக்கு நான் முழுமைப்படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக்
காரணம்.40 எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!
151. உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல். (கிப்லாவை மாற்றுவதன்
மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத்
தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுத் தருவார்.
நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.36
152. எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.6 எனக்கு நன்றி
செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ்
பொறுமையாளர்க ளுடன் இருக்கிறான்.
154. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக
உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.41
155. ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச்
சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி
கூறுவீராக!
156. தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;
நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள்.
157. அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி
பெற்றோர்.
158. ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில்33 ஹஜ்ஜோ, உம்ராவோ
செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை.400 நன்மைகளை மேலதிகமாகச்
செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்;6 அறிந்தவன்.
159. வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான
சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான்.6
சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.
160. மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை)
தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்;
நிகரற்ற அன்புடையோன்.
161. (ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும்6
வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது.
162. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப் படாது. அவர்கள்
அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.
163. உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன்
வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
164. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி
வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ்
வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச்
செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும்,
காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே
வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
165. அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல்
அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட)
அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து
வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும்
கண்டு கொள்வார்கள்.
166. பின்பற்றப்பட்டோர், வேதனையைக் காணும் போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து
விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவுகள் முறிந்து விடும்.
167. "(உலகுக்கு) திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள்
எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக்
கொள்வோம்'' என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித் தான் அல்லாஹ் அவர்களது
செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதாகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து
வெளியேறுவோர் அல்லர்.
168. மனிதர்களே! பூமியில் உள்ள வற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்!
ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.
169. அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது
இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.
170. "அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள்
முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின்
முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
171. வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக
சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏக இறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்)
செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள்.
172. நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!
நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!
173. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக
அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே42 அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு
மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை.
அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.171&431
174. அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில்
நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில்1 அல்லாஹ்
அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத்
துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
175. அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும்
விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை
என்னவென்பது!
176. அல்லாஹ் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளியிருந்(தும் அதை மறைத்)ததே இதற்குக்
காரணம். வேதத்திற்கு முரண்படுவோர் (உண்மையிலிருந்து) தூரமான முரண்பாட்டிலேயே
உள்ளனர்.
177. உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று.
மாறாக அல்லாஹ், இறுதி நாள்,1 வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும்
உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள்,206 யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை
விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை
நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும்,
வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள்.
அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
178. நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன்,
அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில்
கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.
கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும்
மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க
வேண்டும்.401 இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும்
வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.43
179. அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது.
(இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.43
180. உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது
பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது
கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.45
181. (மரண சாசனத்துக்குச் சாட்சியாக இருந்தோர்) அதைச் செவிமடுத்த பின் மாற்றிக்
கூறினால் அதற்கான குற்றம், மாற்றிக் கூறியோரையே சேரும். அல்லாஹ் செவியுறுபவன்;
அறிந்தவன்.
182. மரண சாசனம் செய்பவரிடம் அநீதியையோ, பாவத்தையோ யாரேனும் அஞ்சினால் அவர்களிடையே
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவர் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்;
நிகரற்ற அன்புடையோன்.
183, 184. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்
சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு
கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில்
கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது
பரிகாரம்.47 நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால்
நோன்பு நோற்பதே சிறந்தது.26
185. இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்
வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக்
காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.44 நோயாளியாகவோ,
பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு
எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள்
முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப்
பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை
வழங்கப்பட்டது)
186. என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன்.
பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன்.
எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்
வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)49
187. நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனு
மதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு
நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள்
மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன்
கூடுங்கள்!50 அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும்
வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்!
பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! பள்ளிவாசல்களில்
இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இவை அல்லாஹ்வின் வரம்புகள்.
எனவே அவற்றை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ்
மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
188. உங்களுக்கிடையே (ஒருவருக் கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில்
உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில்
சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!
189. பிறைகளைப்51 பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவை மக்களுக்கும்,
(குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன்,
பின் வழியாக வருவது நன்மை அன்று.52 (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு
வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.
190. உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர்
செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.53
191. (களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை
வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக்
கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே
அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக்
கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.53
192. (போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற
அன்புடையோன்.53
193. கலகம் இல்லாதொழிந்து அதிகாரம்54 அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன்
போர் செய்யுங்கள்! விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர (மற்றவர்கள்
மீது) எந்த வரம்பு மீறலும் கூடாது.53
194. புனித மாதத்துக்கு55 (நிகர்) புனித மாதமே! புனிதங்கள் இரு தரப்புக்கும்
சமமானவை. உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு
நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ்
இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
195. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக்
கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
196. அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள்
தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை
அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில்
ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு
அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து
ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப் பிராணியை (பலியிட
வேண்டும்)56 அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய
பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்
சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது.
அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்' என்பதை அறிந்து
கொள்ளுங்கள்!
197. ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.57 அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது)
விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா
வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான்.
(ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள
வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!
198. (ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது
உங்களுக்குக் குற்றமில்லை.58 அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது
மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை
நினையுங்கள்! இதற்கு முன் வழி தவறி இருந்தீர்கள்.
199. பின்னர், மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும்
புறப்படுங்கள்!59 அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்;
நிகரற்ற அன்புடையோன்.
200. உங்கள் முன்னோர்களை நீங்கள் நினைப்பது போல், அல்லது அதை விட அதிகமாக உங்களுடைய
வழிபாடுகளை முடிக்கும் போது அல்லாஹ்வை நினையுங்கள்! "எங்கள் இறைவா! இவ்வுலகில்
எங்களுக்கு (நன்மையை) வழங்குவாயாக!'' எனக் கேட்போரும் மனிதர்களில் உள்ளனர்.
அவருக்கு மறுமையில்1 எந்த நற்பேறும் இல்லை.
201. "எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும்1
நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' என்று
கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர்.
202. அவர்களுக்கே அவர்கள் பாடுபட்டதற்கான பங்கு உள்ளது. அல்லாஹ் விரைந்து
கணக்கெடுப்பவன்.
203. குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர்
மீதும் எந்தக் குற்றமுமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை.60 (இது இறைவனை)
அஞ்சுவோருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அவனிடம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்'
என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
204. உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றி பேசும், கடுமையான வாதத் திறமை
உள்ளவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ் வையும்
சாட்சியாக்குகிறான்.
205. அவன் உம்மை விட்டுப் புறப்பட்டதும் இம்மண்ணில் குழப்பம் விளைவிக்கவும்,
பயிர்களையும், உயிர்களையும் அழிக்கவும் முயல்கிறான். அல்லாஹ் குழப்பத்தை விரும்ப
மாட்டான்.
206. "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்!'' என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப்
பாவத்தில் ஆழ்த்துகிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகக் கெட்ட தங்குமிடம்.
207. அல்லாஹ்வின் திருப்தியை விரும்பி தம்மையே அர்ப்பணிப்பவர்களும் மனிதர்களில்
உள்ளனர். அடியார்கள் மீது அல்லாஹ் இரக்கமுடையோன்.
208. நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின்
அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.
209. தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்த பின் நீங்கள் தடம் புரண்டால் "அல்லாஹ்
மிகைத்தவன்; ஞானமிக்கவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
210. மேகக் கூட்டங்களில் அல்லாஹ் வும்,61 வானவர்களும்153 வந்து காரியம் முடிக்கப்பட
வேண்டும் என்பதைத் தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்விடமே காரியங்கள் கொண்டு
வரப்படும்.
211. எத்தனை தெளிவான சான்றுகளை அவர்களுக்கு வழங்கி யிருந்தோம் என இஸ்ராயீலின்
மக்களிடம் கேட்பீராக! அல்லாஹ்வின் அருட்கொடை தன்னிடம் வந்த பின்பு மாற்றி
விடுபவனைத் தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன்.
212. (ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள்
நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில்1
அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.
213. மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி
கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே
தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். தெளிவான
சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் வழங்கப்பட்டவர்களே27 அதற்கு
முரண்பட்டனர். அவர்களுக்கிடையே இருந்த பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள்
முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி
காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான்.
214. உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல்
சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு
வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?'' என்று (இறைத்)
தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர்.
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
215. தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து
நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக் காகவும்,
அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும்206 (செலவிட வேண்டும்.)
நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!62
216. உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக்
கடமையாக்கப்பட்டுள்ளது. ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக
இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும்.
அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.53
217. புனித மாதத்தில்55 போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில்
போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும்
(மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு)
உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ் விடம் இதை விடப் பெரியது. கொலையை விட
கலகம் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை
விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில்
தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள்
இவ்வுலகிலும் மறுமையிலும்1 அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள்
நிரந்தரமாக இருப்பார்கள்.
218. நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோரே
அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
219, 220. மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும்
பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு
இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!116 தாங்கள் எதைச்
செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "உபரியானதை' எனக் கூறுவீராக! நீங்கள்
சிந்திப்பதற்காக உங்களுக்குத் தனது வசனங்களை அல்லாஹ் இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல்
சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள்.
சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ் நாடியிருந்தால்
அவன் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்''
எனக் கூறுவீராக!26
221. இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம்
செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட
நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை
கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை
கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை
சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி
சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது
வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.91
222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.48 "அது ஓர் தொல்லை. எனவே
மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!
அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால்
அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை
அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக!
223. உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு
விரும்பியவாறு செல்லுங்கள்!63 உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்!
அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அவனைச் சந்திக்கவுள்ளீர்கள்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
224. நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை
ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்!
அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.64
225. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான்.
உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ்
மன்னிப்பவன்; சகிப்புத் தன்மைமிக்கவன்.64
226. தமது மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம்
உள்ளது.65 அவர்கள் (சத்தியத்தை) திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற
அன்புடையோன்.
227. விவாக ரத்துச் செய்வதில் அவர்கள் உறுதியாக இருந்தால் அல்லாஹ் செவியுறுபவன்;
அறிந்தவன்.
228. விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம்
செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 அவர்கள் நம்பி
இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி
இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத்
திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது
போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர்
உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.66
229. இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில்
சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.66 மனைவியருக்கு நீங்கள்
கொடுத்தவற்றி லிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை.
அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர.
அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள்
அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும்
குற்றமில்லை.402 இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின்
வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.
230. (இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக)
அவளை அவன் விவாக ரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை
அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாக
ரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின்
வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து
கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன்
இதைத் தெளிவுபடுத்துகிறான்.66
231. பெண்களை நீங்கள் விவாக ரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவை
நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல
முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச்
சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார்.
அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ்
செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை67 வழங்கியதையும் எண்ணிப்
பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
232. பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து
விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து
கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோருக்கு
இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது.
அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.66
233. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட)
தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.314
அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை.
சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார்.68 பெற்றவள் தனது
பிள்ளையின் காரண மாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட
மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை
உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால்
இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்)
பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல
முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமு மில்லை. அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
234. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து
நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும்.69 அந்தக்
காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு
செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.403 நீங்கள் செய்வதை அல்லாஹ்
நன்கறிந்தவன்.
235. (காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக
மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை.404 அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை
அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி
அளித்து விடாதீர்கள்! உரிய காலம்69 முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு
வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு
அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மைமிக்கவன் என்பதையும் அறிந்து
கொள்ளுங்கள்!
236. அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர்108 தொகையை முடிவு செய்யாத
நிலையிலோ விவாக ரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத்
தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள்
அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.74
237. அவர்களுக்கு மஹர்108 தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாக
ரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது
திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர.
(ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே70 இறையச்சத்திற்கு நெருக்கமானது.
உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள்
செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
238. தொழுகைகளையும், நடுத் தொழுகையையும்71 பேணிக் கொள்ளுங்கள்!361 அல்லாஹ்வுக்குக்
கட்டுப்பட்டு நில்லுங்கள்!
239. நீங்கள் அஞ்சினால் நடந்தோ, வாகனத்திலோ (தொழலாம்). அச்சம் தீர்ந்ததும் நீங்கள்
அறியாமல் இருந்ததை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு72 அல்லாஹ்வை நினையுங்கள்!
240. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் "ஒரு வருடம் வரை அவர்கள்
வெளியேற்றப்படாமல், வசதிகள் வழங்கப்பட வேண்டும்'' என மரண சாசனம் செய்ய வேண்டும்.405
தங்கள் விஷயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக வெளியேறினால் உங்கள் மீது
குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
241. விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட
வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.74
242. நீங்கள் விளங்குவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
243. மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா?
அவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தனர். "செத்து விடுங்கள்!''20 என்று அவர்களுக்கு
அல்லாஹ் கூறினான். பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். மனிதர்கள் மீது அல்லாஹ்
அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
244. அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! அல்லாஹ் அறிந்தவன்; செவியுறுபவன் என்பதை
அறிந்து கொள்ளுங்கள்!53
245. அல்லாஹ்வுக்காக அழகிய கடன்75 வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக
(இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும்
வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
246. மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி
நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில்
போரிடுவோம்''76 என்று தமது நபியிடம் கூறினர். "உங்களுக்குப் போர்
கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?'' என்று அவர் கேட்டார்.
"எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது
அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?'' என்று அவர்கள்
கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர
(மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.
247. "தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்''76 என்று
அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். "எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம்
இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள்
வசதியும் வழங்கப்படவில்லை'' என்று அவர்கள் கூறினர். "உங்களை விட அவரை அல்லாஹ்
தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக
வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ்
தாராளமானவன்; அறிந்தவன்'' என்று அவர் கூறினார்.
248. "அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப்
பெட்டி வரும்.77 அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும்.
மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில்
எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை
கொண்டிருந்தால் அதில் உங்களுக்குச் சான்று உள்ளது'' என்று அவர்களின் நபி அவர்களிடம்
கூறினார்.
249. படைகளுடன் தாலூத் புறப்பட்ட போது "அல்லாஹ் உங்களை ஒரு நதியின் மூலம்
சோதிக்கவுள்ளான். அதில் அருந்துபவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர். அதை உட்கொள்ளாதவர்
என்னைச் சேர்ந்தவர்; கை அளவு அருந்தியவர் தவிர'' என்றார். அவர்களில் சிலரைத் தவிர
(மற்றவர்கள்) அதில் அருந்தினார்கள். அவரும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும்
அதைக் கடந்த போது "ஜாலூத் மற்றும் அவனது படையினருடன் (போரிட) இன்று எங்களுக்கு எந்த
வலிமையும் இல்லை'' என்றனர். அல்லாஹ்வைச் சந்திக்கவுள்ளோம் என்று நம்பியோர்,
"எத்தனையோ சிறு படைகள், பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் விருப்பப்படி
வென்றுள்ளன. சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்'' என்றனர்.
250. ஜாலூத்தையும், அவனது படையினரையும் அவர்கள் களத்தில் சந்தித்த போது "எங்கள்
இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை
நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு
உதவுவாயாக!'' என்றனர்.
251. அவர்களை அல்லாஹ்வின் விருப் பப்படி (தாலூத் படையினர்) தோற்கடித்தனர். தாவூத்,
ஜாலூத்தைக் கொன்றார்.78 அவருக்கு அல்லாஹ் அதிகாரத்தையும், ஞானத்தையும் வழங்கினான்.
தான் நாடியவற்றை அவருக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதர்களில் சிலர் மூலம் வேறு
சிலரை அல்லாஹ் தடுக்காதிருந்தால் பூமி சீர்கெட்டிருக்கும். எனினும் அகிலத்தார் மீது
அல்லாஹ் அருளுடையவன்.
252. இவை உண்மையை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வசனங்கள். அதை (முஹம்மதே!) உமக்குக்
கூறுகிறோம். நீர் தூதர்களில் ஒருவர்.
253. இத்தூதர்களில் சிலரை, மற்றும் சிலரை விடச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில்
சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன்
உயர்த்தியிருக்கிறான்.37 மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம்.
ரூஹுல் குதுஸ் மூலம் அவரை வலுப்படுத்தினோம். தூதர்களுக்குப் பின் வந்தோர் தம்மிடம்
தெளிவான சான்றுகள் வந்த பின்பும் அல்லாஹ் நாடியிருந்தால் சண்டையிட்டிருக்க
மாட்டார்கள். என்றாலும் அவர்கள் முரண்பட்டனர். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும்
உள்ளனர். (ஏக இறைவனை) மறுப்போரும் உள்ளனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள்
சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் விரும்புவதைச் செய்வான்.
254. நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ17 இல்லாத நாள்1 வருவதற்கு முன்
நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (ஏக இறைவனை)
மறுப்போரே அநீதி இழைத்தவர்கள்.
255. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும்
உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில்
உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம்
யார் தான் பரிந்து பேச முடியும்?17 அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன்
அறிகிறான். அவன் அறிந்திருப்ப வற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன்
நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும்.
அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்;
மகத்துவமிக்கவன்.
256. இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி
தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான
கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
257. நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் உதவுபவன். இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு
அவர்களைக் கொண்டு செல்கிறான். (ஏக இறைவனை) மறுப்போருக்கு தீய சக்திகளே
உதவியாளர்கள். வெளிச்சத்திலிருந்து இருள்களுக்கு429 அவர்களைக் கொண்டு செல்கின்றனர்.
அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர்.
258. தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து
தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச்
செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச்
செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான்.
எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை)
மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி
காட்ட மாட்டான்.
259. அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர்
அடியோடு வீழ்ந்து கிடந்தது. "இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை
உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள்
மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து "எவ்வளவு நாளைக்
கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம்
கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். "அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து
விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக!406 (செத்து
விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக
ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம்
என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!''
என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது "அல்லாஹ் அனைத்துப்
பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார்.79
260. "என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக்
காட்டுவாயாக!'' என்று இப்ராஹீம் வேண்டிய போது, "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?''
என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் "அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே.''
என்றார். "நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம்
வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும்
வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ்
மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக'' என்று (இறைவன்) கூறினான்.
261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம்.
அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன.
தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ்
தாராளமானவன்; அறிந்தவன்.
262. அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர்
சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின்
இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
263. தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக்
கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவை யற்றவன்; சகிப்புத் தன்மைமிக்கவன்.
264. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்களுக்குக்
காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக்
காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண்
படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல்
ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.
(தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
265. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான
நம்பிக்கைக்காகவும் தமது செல் வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான
இடத்தில் அமைந்த தோட்டம். பெரு மழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப்
பொருட்களை வழங்குகிறது. பெரு மழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள்
செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
266. பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது; அவற்றின்
கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன; அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன;
அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு
விடுகிறது; அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து
விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக
இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.
267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும்,
பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்)
செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய
மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரி யவன்
என்பதை அறிந்து கொள்ளுங்கள்!80
268. ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை
உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும்
வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
269. தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர்
ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்)
சிந்திப்பதில்லை.
270. நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை
அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.
271. தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு)
மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு
(இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
272. அவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை.81 மாறாக தான்
நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். நல்லவற்றில் நீங்கள் எதைச்
செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள்.
நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும்.
நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
273. (பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின்
பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப்
பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள்
என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்!
மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும்
அல்லாஹ் அதை அறிந்தவன்.82
274. தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்
வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு
எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
275. வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே
எழுவார்கள்.83 "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக்
காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது
இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது
உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள்.
அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப்
பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
277. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும்
கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த
அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
278. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால்
வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!84
279. அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும்
போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள்
செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது.
உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
280. அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும்.
நீங்கள் அறிந்து கொள்வோராக இருந்தால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச்
சிறந்தது.73
281. அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளை1 அஞ்சுங்கள்! பின்னர்
ஒவ்வொருவருக்கும், அது உழைத்தது முழுமையாக வழங்கப்படும்.265 அவர்கள் அநீதி
இழைக்கப்பட மாட்டார்கள்.
282. நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன்
கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில்
எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது
எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது
இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது.
கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல
இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில்
இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என
நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!)
அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள்.85
அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக்
குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம்
நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத் தக்கது; ஒருவருக் கொருவர் சந்தேகம் கொள்ளாமல்
இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால்
தவிர. (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக்
குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்
தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது
உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான்.
அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.
283. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப்
பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது
நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்!
சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது.
நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.
284. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன.
உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அது
பற்றி உங்களை விசாரிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். தான் நாடியோரைத்
தண்டிப்பான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
285. இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார்.
நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும்,
அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். "அவனது தூதர்களில்
எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம்;37 செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்.
எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல்
உண்டு'' எனக் கூறுகின்றனர்.
286. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.68 அவர்
செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.265 "எங்கள் இறைவா!
நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள்
இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது
சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி
விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே
எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
(எனவும் கூறுகின்றனர்).
Tags:
Quran