நீதி எங்கே?

 

நீதி எங்கே?

நீங்கள் ஏக இறைவனை நம்புபவர் தானே??

இறைவன் ஒருவன் இருக்கிறார் எனில் இப்பூமியில் நீதி, நியாயம் நூறு சதவீதம் சரியாக இருக்கும்?! இருக்கவேண்டும் தானே?! கடவுள் இருக்கிறார் எனில் நீதியும் நியாயமும் இருக்கவேண்டுமல்லவா? அவ்வாறு இருக்கிறதா?? இல்லை தானே!! பல இடங்களில் அநீதிகளும் அக்கிரமங்களும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் காலம் செல்ல செல்ல அநீதிகள் அதிகரித்து கொண்டு தான் உள்ளன!! ஆக எப்போது இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும் பல லட்சம் பேர் கோடி பேர் அநீதியாக கொல்லப்பட்டுள்ளனர்.  கொன்றவர்களும் நன்றாக வாழ்ந்தும் சென்றுவிட்டனர்!! இந்த உலகத்தின் சட்டத்திலிருந்தும் நீதிபதிகளிடத்திலிருந்தும் தப்பிவிட்டார்கள் தப்பவைக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் இப்பிரபஞ்சத்தின் அதிபதியும் நீதிபதியான படைப்பாளனிடமிருந்து எப்போது நீதி கிடைக்கும், எப்படி கிடைக்கும்? படைப்பாளன் நீதியாளன் தானே?! இதை பற்றி என்றைக்காவது சிந்தித்ததுண்டா?

நம்மிடம் இருக்கும் பதில், ஒருவேளை மறுபிறவியில் கிடைக்கலாம் அல்லவா? இந்த பிறவியில் தவறு செய்ததால் , அடுத்த பிறவியில் விலங்காகவோ பறவையாகவோ பிறக்க வைப்பது சரியான நீதியாகுமா? பல தேவைகளுடனும், கட்டாயத்துடனும் சோதனைகளுடனும், பிரச்சினைகளுடனும், மன அழுத்தத்துடனும் இருக்கும் மனிதனாக வாழ்வது கடினமா? பறவை போல் சுதந்தரமாக வாழ்வது கடினமா?  பறவையாகவோ விலங்காகவோ ஆக்குவது சரியான நீதியாகுமா? எந்தமத வேதங்களிலும் இவ்வாறான சிந்தாந்தம் சொல்லப்படவில்லை, மாறாக மதகுருமார்களே திரித்து போதிக்கின்றனர்?! ஒரு வேளை உண்மையிலேயே அவ்வாராக இருந்தாலும் அது சரியான நீதியாகாது தானே!!

இன்றைக்கு உலகில் 800 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும். மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில்  போய் முடியும்; அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக்கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும். மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒருகோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்றுபாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்கவேண்டும். 90 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன. புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம். ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப்பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்? ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தநிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கமாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது. அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?

ஆக அநீதிக்கான நீதி எப்போது தான் கிடைக்கும்  எப்படி கிடைக்கும்..?

தவறு செய்பவரை உடனுக்குடன் தண்டித்தால் எவரும் மிஞ்சமாட்டார்கள் என்பதே நிதர்சனம்,  பிறகு என்ன தான் வழி? 
இப்போது இஸ்லாம் கூறும் கொள்கையை கூறுகிறேன்!! இது சரியா இல்லையா? என சிந்தித்துக் கொள்ளுங்கள்.
இறைவன் மனிதனை படைத்தார்,  மனிதன் செய்பவற்றை நன்கு அறிந்தவர். மனிதனுக்கு எது சரி எது தவறு என தனது வேதத்தின் மூலம் இறைதூதர் வழியாக தந்தருளினார். நன்மை தீமையை பிரித்து காட்டியும் விட்டார். தேர்ந்தேடுத்து பின்பற்றுவது மனிதனுடைய விருப்பத்தில் விட்டுவிட்டார். இது அடிப்படை!! முதன்முதலாக ஒரு நபர் இறந்திருப்பார் அல்லவா? அவரிலிருந்து.. அவருடைய இறந்த வழித்தோன்றல்கள் ... இன்னும் நான் ..நீங்கள் .. நம் சந்ததிகள் .. உலகம் அழியும்போது கடைசியாக மரணிக்கும் கடைசி மனிதன் வரை; உலகம் அழிந்த பின் அனைவரும் மீண்டும் எழுப்பப்படுவார்கள் ; எழுப்பப்பட்டு அவரவர் செய்த செயல்களுக்கு பிரபஞ்சத்தின் நீதிபதியான இறைவனால் விசாரிக்கப்பட்டு , தக்க பரிசும், தண்டனையும் வழங்கப்படும் என்பதே இஸ்லாமிய நம்பிக்கை. இது ஆங்கிலத்தில் Judgement Day (மறுமை நாள்) என சொல்வார்கள்.

அட போங்க பாய்!! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என கேட்கும் சிலர்,  நீதிக்கான வேறு தீர்வை சொன்னால் நலமாக இருக்கும்..??
நீங்களும் 'ஹிட்லரும்' ஒன்றா? நீங்களும் 'அங்கிள் ஜோ'வும் ஒன்றா? ஹிட்லர் 60 லட்சம் யூதர்களை கொன்றுள்ளார். இவர்கள் கொன்ற அளவு மக்களை கூட நீங்கள் ஒரே நேரத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள்!? நானும் நீங்களும் இறுதியாக புதைக்கவோ எரிக்கப் படுவோம்,  அவர்களும் அவ்வாறே ! ஆக அனைவரும் மண்ணோடு மண்ணாகி போன பிறகு அனைத்தும் அவ்வளவுதான் என்றால், கடவுளின் பங்களிப்பு தான் என்ன? நீதி என்னவாயிற்று? எத்தனையோ லட்சக்கணக்கானோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் எப்போது நீதி கிடைக்கும்..?
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்; சரி, ஹிட்லர் போன்றவர்கள் பல(60 லட்சம்) கொலைகளை செய்திருக்கிறார்கள்? இவர்களுக்கு அப்படி என்ன தான் தண்டனை கொடுக்கமுடியும், அதிகபட்சமாக நரக நெருப்பில் எரித்தால் கூட அதோடு அவ்வளவு தானே!! என கேள்வி வரலாம் ;

ஆம் நல்ல கேள்வி!! ஹிட்லர் போன்றவர்களுக்கு இவ்வுலகத்தில் ஒரு முறை தான் தூக்கு தண்டனை கொடுக்க முடியும்!! ஆனால் மேற்படி மரண தண்டனை ஒரேயொரு யூதரை கொன்றதற்கு ஈடான தண்டனைதான். எஞ்சியுள்ள ஐம்பத்து ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது யூதர்களை எரித்துக் கொன்றதற்கான தண்டனை என்ன?. ஆனால் (Judgement Day) மறுமையில் அவ்வாறல்ல!! ஒருவர் ஒரு லட்சம் பேரை எரித்து கொலை செய்திருந்தால்,  அவர் செய்த அதே அளவான தண்டனை அவருக்கு வழங்கப்படும்; அவர் எரிந்து கரிக்கட்டை ஆன பின்னாலும் அவருக்கு மீண்டும் புது தோள்கள் கொடுக்கப்பட்டு மீண்டுமீண்டும் எரிக்கப்படுவார் (பார்க்க குர்ஆன் 4:56) ஆக இது போன்ற சரியான நீதி அங்கு மட்டும் தான் கிடைக்கும், இங்கு?? அந்நாளில் ஒருவரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். ஆக இஸ்லாம் சொல்கிறது,  இவ்வுலக வாழ்க்கை மனிகனுக்கான சோதனைக்கூடம், அவரவரின் செயலுக்கேற்ப(மறு ஜென்மம் அல்ல) மறு(மை)வாழ்வில் கூலி வழங்கப்படும். அங்கு நிரந்தரமாக இருப்பார்கள்.

இத்தகைய மறுமையைப் பற்றிப் ஆழ்ந்து யோசிப்பதற்கு முன்னர் இப்போது நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்வது நல்லது. ஏனெனில் ஒரு பொருளை முதலில் படைப்பது தான் சிரமமானது. அதை அழித்து விட்டு மறுபடியும் உருவாக்குவது அவ்வளவு சிரமமானதல்ல. இது அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளக்கடிய விதியாகும். ஒரு கம்பியூட்டரை உருவாக்க எத்தனையோ ஆண்டுகள் தேவைப்பட்டன உருவாக்கிய பின் அது போல் இலட்சக்கணக்கில் உருவாக்குவது எளிதாகி விட்டது. நூறு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இவ்வுலகில் இருக்கவில்லை வேறு எங்கேயும் இருக்கவில்லை எந்தப் பொருளாகவும் நீங்கள் இருக்கவில்லை. ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இறைவன் படைத்திருப்பதை நம்பும் முஸ்லிம்களுக்குப் படைக்கப்பட்டவைகளை அழித்து விட்டு மீண்டும் படைப்பது நம்புவது எளிதானதாகும்.

இவ்வுலகில் குற்றங்கள் குறைய வேண்டும் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டும் ஒழுக்கங்களைப் பேண வேண்டும். நற்பண்புகளை கையாளவேண்டும். மனிதன் தான் பெற்றுள்ள பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதனாக வாழவேண்டும் என்றால் மறுமை தேவை. நாம் இவ்வுலகில் எவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரம் வல்லமை தன் தவறை மறைக்கும் திறமைப் பெற்றிருப்பினும் அண்ட சராசரங்களை அடக்கியாளும் சக்தி ஒன்று உள்ளது. அந்த சக்திக்கு பதில் சொல்ல வேண்டும். இம்மையில் இல்லையென்றால் மறுமையில் பதில் சொல்ல வேண்டும் என்ற பயம் இருந்தால் தான் மனிதன் மனிதனாக வாழ்வான். மீறுபவன் படிப்பவன் தண்டனைப் பொறுவான். கட்டுப்பட்டவன் நல்ல நிலைகளை அடைவான். அதற்குதான் மறுமை (10:4, 45:21,22). இன்னும் இந்த மறுமை வாழ்கையில் நாம் பூமியில் செய்தவற்றுக்கு தக்க பரிசும் தண்டனையும் வழங்கப்படும். இன்னும் இஸ்லாத்தில் மிக்பபெரும் தீமையாக,  இறைவனுக்கு இணைவைப்பதை சொல்கிறது ..

இறைவனுக்கு இணைவைப்பது என்றால் என்ன??

இறைவன் அல்லாத ஒரு படைப்பினத்தை (கல், மரம், செடி, கொடி, இயற்கை வஸ்துக்கள், சிலை, சமாதி போன்ற எதையாகினும்) படைப்பாளனாகிய இறைவனுக்கு, நிகராக நினைப்பதே/வைப்பதே இணைவைத்தல்; இறைவனிடமிருந்து எண்ணற்ற அருட்கொடைகளை பெற்றுக்கொண்டு இறைவனை விட்டுவிட்டு வேறு படைக்கப்பட்ட பொருளை வணங்குவது நன்றி கெடு தானே!! இறைவனுக்கு நிகர் எவருமில்லை என சொல்லும் நாம் அவருக்கு இணையாக எதையேனும் வைத்தல் நியாயமா? ஒரு படைப்பினத்தை இறைவனாக நினைத்துக்கொண்டு வணங்கினால் அதும் தவறுதான்;  எலியை புலி என நம்பினால் அது எவ்வாறு தவறான மூட நம்பிக்கையோ அது போல் தான் இதும். ஆக, நம்மை படைத்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும், சரியான முறையில் இறைவனை நம்பி இறைவனை மட்டும் வணங்கி அவருக்கு இணைவைக்காமல் (இறைதூதர் வழியில் பினபற்றி) நற்செயல் புரிந்து மனிதனாக வாழவேண்டும் என்பதே இஸ்லாத்துடைய சாரம்சம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை