தாய் தந்தையரை திட்டாதே!

தாய் தந்தையரை திட்டாதே!

◆ தாய் தந்தையரைத் திட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவம் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னவுடன், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் தாய், தந்தையரைத் திட்டுவானா?'' என்று நபித்தோழர்கள் கேட்டார்கள்,"ஆம்! இவன் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகின்றான். உடனே அவன் பதிலுக்கு இவனது தந்தையைத் திட்டுகின்றான். இவன் அவனுடைய தாயைத் திட்டுகின்றான். உடனே அவன் இவனது தாயைத் திட்டுகின்றான். (இது இவன் நேரடியாகத் திட்டியதற்குச் சமம்)'' என்று பதிலளித்தார்கள். (ஆதார நூல் : முஸ்லிம் 146)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இங்கு நேரடியாக ஒருவன் தன் தாயையோ தந்தையையோ திட்டுவதைக் குறிப்பிடவில்லை. இவன் மற்றவனைத் திட்டும் போது, அவனை மட்டும் திட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், "உனது தாயைத் தெரியாதா?  தந்தையைத் தெரியாதா?'என்று இழுத்துப் பேசுவான். அது தான் தாமதம்! உடனே அவனும் அது போலத் திட்ட ஆரம்பித்து விடுகின்றான். இவ்வாறு அவன் திட்டுவதற்குக் காரணமாக இருந்ததால் அது நீயே நேரடியாகத் திட்டியதாகும். இது சாதாரண பாவமல்ல! சிறு பாவம் என்று ஒதுக்கப்படக் கூடிய பாவம் அல்ல! நரகத்தில் வீழ்த்தக் கூடிய பெரும் பாவம் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

உலகமெல்லாம் தாய் தந்தையரைத் திட்டுவது பாவம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும்,  அடுத்தவருடைய தாய் தந்தையரைத் திட்டுவதை, அதன் மூலம் எதிர்விளைவை ஏற்படுத்துவதைப் பெரும்பாவம் என்று கூறுகின்றார்கள்.

1. நீ பிறரின் தாய் தந்தையரையும் திட்டாதே!

2. அதன் காரணமாக உன்னுடைய தாய் தந்தையரைப் பிறர் திட்ட வைத்து விடாதே!

3. தாய் தந்தையரைத் திட்டுவது ஒரு பெரும் பாவம். அவர்களிடம் "சீ' என்ற வார்த்தையைக் கூடக் கூறாமல் அன்பான, அருளான,  அழகான வார்த்தைகளைக் கூறி அவர்களை அரவணைத்து வாழ்வது அழகிய பண்பாகும் என்பதே இஸ்லாத்தின் போதனை.

தாய் தந்தையரை திட்டுவது பொரும்பாவம்.


"ஊருலே உள்ளதுலாம் போய் சேர்ந்துருச்சு இது கிடந்துகிட்டு உசுற வாங்குது" என தாய் தந்தையரை திட்டுவது பரவலான வழக்கமாக இன்று மாறியிருக்கிறது. நோய் வாய்ப் பட்டு கிடக்கும்போது இதுபோன்ற வசைமொழிகளை கொண்டு பொற்றோர்களை ஏசுவதை இஸ்லாம் பெரும் பாவமாகக் கருதுகின்றது. குர்ஆனில் அவர்களை நோக்கி 'சீ' என்று கூட சொல்லாதீர்கள் என்று கண்டிக்கிறது.

"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 17:23,24)

அதேபோல மிகச்சிறந்த நற்செயல் தாய் தந்தைக்கு சேவை செய்வதாகும்.

நற்செயலில் மிகச் சிறந்தது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நற்செயல்களில்" சிறந்தது உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதும், தாய் தந்தையருக்கு நன்மை புரிவதுமாகும்" (நூல்: முஸ்லிம்:140.)

கருத்துரையிடுக

புதியது பழையவை