கருணை காட்டுவோம்..!

கருணை காட்டுவோம்..!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.”

மேலும் கூறினார்கள்: 
எவர் படைப்பினங்களின்‬‪ கருணை காட்டவில்லையோ‬ அவன் மீது படைத்தவன் கருணை காட்ட மாட்டான். - (நபிமொழி , சஹீஹ் புஹாரி 6013)

இறைவிசுவாசியின்  இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள்,  உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில்,முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை இறைநம்பிக்கையின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்:

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினீார்கள்:
“நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை இறைநம்பிக்கை கொண்டவர்களாக மாட்டீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “இறைவனின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்” என்று கூறினார்கள். (ஆதார நூல்: முஃஜமுத் தப்ரானி)

இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும். பகையும் கருணைக்கு தடையல்ல.

இதோ இது குறித்த சில இஸ்லாமிய போதனைகளை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறுவதைப் பாருங்கள்!

புனிதப்பள்ளியை விட்டு உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2).
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

”ஒரு மனிதர் ஒரு பாதை  வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) கிணறு ஒன்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தார் அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தமது மனதுக்குள்) ”எனக்கு ஏற்பட்டதைப் போன்ற அதே (கடுமையான) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்!” என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு, அதைத் தமது வாயால் கவ்விய படி மேலேறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார்  அல்லாஹ்☝இதற்கு நன்றியாக அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்” என்று இறைவனின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைச் செவியுற்ற) மக்கள், ”இறைவனின் தூதரே! இந்த மிருகங்கள்  விஷயத்திலும் (அவற்றுக்கு உதவுவதால்) எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா” என்று கேட்டார்கள். அதற்கு, இறைவனின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் "(ஆம்;) உயிர் பிராணிகள் ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்” என்று சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் :4516.)

இறைவனின் இறுதி இறைதூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு காலத்தில்) ஒரு நாய்  கிணறு ஒன்றைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது . அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள் உடனே அவள் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் (ஒரு நற்செயலின்) காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. (ஸஹீஹ் முஸ்லிம் 4518)

ஆக, அனைத்து மக்கள் மீதும், இன்னும் விலங்குகளுக்கும் கூட இரக்கம் காட்டவேண்டும் என்ற இந்த நற்போதனையை இனி பின்பற்றுவோமாக..!!

மண்ணிலிருப்பவர்களுக்கு கருணை காட்டுங்கள். விண்ணிலிருப்பவன் நமக்கு கருணை காட்டுவான்.
- இறைதூதர் முஹம்மது நபி(ஸல்)


கருத்துரையிடுக

புதியது பழையவை