இஸ்லாத்தில்
சிறந்தது எது?
“ஒருவர் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் “இஸ்லாத்தில் சிறந்தது எது“ எனக் கேட்டதற்கு, “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்“ என்றார்கள்”. (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 12)
ஏழைகளுக்கு உதவு உணவளிப்பது, தானதர்மங்கள் குறித்த இஸ்லாமிய போதனையை, மேற்கண்ட நபிகளாரின் இந்த பொன்மொழிகளின் மூலம் நாம் அறிந்துக்கொள்ளலாம்.
இவ்வாறான நற்காரியங்கள் வெறுமனே பணக்காரர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் தம்மால் முடிந்தளவு, இறைவன் தனக்கு வழங்கியவற்றிலிருந்து நல்வழியில் செலவிட வேண்டும் என்று குர்ஆனில் (2வது அத்தியாயம் :3வது வசனத்தில்) இறைவன் கூறுகிறான்.
சரி, அப்படியென்றால், ஏழைகளால் தர்மம் செய்யவே முடியாதா?
இது போன்றதொரு கேள்வியை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடத்தில், சில தோழர்கள் கேட்டனர், என்ன பதில் சொல்லப்பட்டது என்பதை கீழ்கண்ட நபிமொழியை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
'தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்' என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், '(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?' என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள், 'தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்' என்று கூறினார்கள்.
மக்கள், 'அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்' அல்லது 'அதை அவர் செய்யாவிட்டால்' (என்ன செய்வது?)' என்று கேட்டனர்.
நபி(ஸல்) அவர்கள், 'பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்' என்றார்கள்.
மக்கள், '(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)' என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள், 'அப்போது அவர் 'நல்லதை' அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்' என்றார்கள்.
'(இதையும்) அவர் செய்யாவிட்டால்?' என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், 'அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்' என்றார்கள் முஹம்மது நபி (ஸல்) (ஆதாரம் - புஹாரி நூல் 6022)
இஸ்லாமிய மார்க்கம் என்பதே, பிறர் நலம் நாடுவது தான். -முஹம்மது நபி (ஸல்) (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 95)